×

இந்த நாள் பிராணிகள் வதை தடுப்பு அலுவலகத்தில் பசு இறந்ததால் பொதுமக்கள் முற்றுகை

சிவகங்கை, ஜன.24: மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு அலுவலகம் சார்பில் பிடித்து செல்லப்பட்ட பசு மாடு இறந்ததால், உரிமையாளர்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். சிவகங்கை நகர் போலீஸ் ஸ்டேசன் அருகே மாவட்ட பிராணிகள் வதை தடுப்பு அலுவலகம் மற்றும் கால்நடை காப்பகம் உள்ளது. இந்த அலுவலகம் சார்பில் சிவகங்கை நகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றித்திரியும் கால்நடைகளை பிடித்து இந்த காப்பகத்தில் வைத்து பராமரித்து வருவர். மாடுகளின் உரிமையாளர்கள் அபராதம் செலுத்தி விட்டு மாடுகளை பிடித்து செல்வது வழக்கம். ஆனால் காப்பகத்தில் கால்நடைகளுக்கான உணவு, நீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை.

இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் வாணியங்குடி ஊராட்சி பகுதிகளில் உள்ள கால்நடைகளை பிடித்து வந்து காப்பகத்தில் அடைத்துள்ளனர். அவைகளுக்கு வைக்கோல், கழனி நீர் உள்ளிட்டவை வைக்காமல் முட்டைகோசை வைத்துள்ளனர். இதில் இரண்டு நாட்களுக்கு முன் இங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த காளையப்பன் என்பவரின் பசுமாடு இறந்துள்ளது. ஆனால் இறந்த மாட்டை அப்புறப்படுத்தாததால் துர்நாற்றம் வீச தொடங்கியது. இதையடுத்து நேற்று மாடுகள் வளர்க்கும் இப்பகுதி மக்கள் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பாதிக்கப்பட்டவர்கள் கூறியதாவது:மாடுகளை பிடித்து வந்தவுடன் அலுவலர்களிடம் வந்து மாட்டை வழங்கும்படி கேட்டால் ரூ.5ஆயிரம், ரூ.10ஆயிரம் கொடுங்கள் என கேட்கின்றனர். அவ்வளவு பணம் உடனடியாக கொடுக்க முடியாத நிலையில், சில நாட்கள் கழித்து வந்தால் மாடுகளுக்கு உணவு கூட இல்லாமல் வைத்துள்ளனர். இது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய முடிவு எடுக்க வேண்டும். இறந்த மாடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும என்றனர்.

Tags : public ,Animal Husbandry Office ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிப்பு அம்மை...