ஜெயலலிதா கோயில் திறப்பு விழா நிகழ்ச்சியில் நலிவுற்ற நிர்வாகிகளுக்கு உதவி அமைச்சர் உதயகுமார் தகவல்

திருமங்கலம், ஜன. 24: மதுரை மேற்கு மாவட்டம், திருமங்கலம் அருகே டி.குன்னத்தூரில் ஜெயலலிதா பேரவை சார்பில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருக்கு கோயில் கட்டப்பட்டுள்ளன. இக்கோயிலின் திறப்பு விழா வரும் 30ம் தேதி நடக்கிறது. இது குறித்து வருவாய்த்துறை அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளருமான ஆர்பி உதயகுமார் நேற்று கூறியதாவது: ஜன.30ம் தேதி குன்னத்தூரில் நடக்கும் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் பன்னீர்செல்வம் ஆகியோர் எம்ஜிஆர், ஜெயலலிதா கோயிலை திறந்து வைக்கின்றனர். இதற்கான ஏற்பாடு முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் திருமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 116 ஊராட்சிகளில் தலா ஒருவர் வீதம் 116 நலிவுற்ற மூத்த அதிமுக நிர்வாகிகளுக்கு பசுவும், கன்றும் வழங்கப்பட உள்ளது. இதை முதல்வரும், துணை முதல்வரும் துவக்கி வைக்கின்றனர்.

கோயில் திறப்புவிழாவையொட்டி மேற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் எல்.இ.டி பிரசார வாகனம் தயார் செய்யப்பட்டு, அது தொகுதி முழுவதும் சென்று பிரசாரம் செய்யும். இவ்வாறு அவர் தெரிவித்தார். மேலும், அமைச்சர் உதயகுமார் கள்ளிக்குடி ஒன்றியத்தில் உள்ள செங்கப்படை, கரிசல்காளான்பட்டி, அரசப்பட்டி, குளத்துவாய்பட்டி, தூம்பக்குளம், நெடுங்குளம், பழைய நெடுங்குளம், உலகாணி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கோயில் திறப்பு விழாவுக்கான அழைப்பிதழ்களை பொதுமக்களிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கள்ளிக்குடி ஒன்றியச் செயலாளர் மகாலிங்கம், தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: