நாங்காஞ்சியாறு முழு கொள்ளளவை எட்டியது மலர்தூவி வரவேற்பு

ஒட்டன்சத்திரம், ஜன. 24: ஒட்டன்சத்திரம் நாங்காஞ்சியாறு நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியதால் பொது பணித்துறையினர் மலர்தூவி வரவேற்றனர். ஒட்டன்சத்திரம் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த தொடர்மழை காரணமாக பரப்பலாறு அணை முழு கொள்ளளவை எட்டியது. இதனால் விவசாய தேவைக்காக அணை திறந்து விடப்பட்டு, அனைத்து குளங்களும் நிரம்பி விட்டன. இந்நிலையில் இடையகோட்டை நாங்காஞ்சியாறு நீர்த்தேக்கமும் அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 398 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்நீர்த்தேக்கத்தின் உயரம் 39.37 அடியாகும். தற்போது நீர்த்தேக்கத்திற்கு 173 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. 80 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.

இந்நீர்த்தேக்கம் மூலம் திண்டுக்கல் மாவட்டத்தில் 2,615 ஏக்கர் நிலம், கரூர் மாவட்டத்தில் 3,635 ஏக்கர் நிலம் என மொத்தம் 6,250 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. 14 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதற்கிடையே நீர்த்தேக்கத்தில் முழு கொள்ளளவை எட்டியதை வரவேற்கும் விதமாக பொதுப்பணித்துறை சார்பில் நேற்று செயற்பொறியாளர் கோபி, உதவி செயற்பொறியாளர்கள் சுஜாதா, உதயகுமார், கூட்டுறவு சங்க தலைவர் செல்வராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்லமுத்து, ஊராட்சி மன்ற தலைவர் தலைவர் சரவணன் மற்றும் விவசாயிகள், பொதுமக்கள் மலர்தூவி வரவேற்றனர்.

Related Stories: