மூணாறு: மூணாறு தாவரவியல் பூங்காவில், புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு நடந்த இசை நிகழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது. கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் அமைந்துள்ள மூணாறு தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படுகிறது. இப்பகுதியில் மாட்டுப்பட்டி டேம், குண்டளை டேம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலாத் தலங்கள் உள்ளன. நீண்ட நெடிய மலைத் தொடர்களும், தேயிலை தோட்டங்களும், ஆங்காங்கே விண் முட்டும் மரங்களும் காண்போரை கவரும். மூணாறின் இயற்கை அழகை கண்டு ரசித்து மகிழ நம்நாட்டவர் மட்டுமல்லாமல், அயல் நாட்டவர்களும் வருகை தருகின்றனர். இந்நிலையில், கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையையொட்டி மூணாறில் உள்ள அரசு தாவரவியல் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
இவர்களை கவரும் நோக்கில் அம்மாநில சுற்றுலாத் துறை சார்பில் இசை இரவு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாலை நேரங்களில் ‘‘வின்டர் மியூசிக்கல் நைட்ஸ்’’ என்னும் இசை நிகழ்ச்சி கடந்த டிச.24 முதல் ஜன.4 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று புத்தாண்டு பிறப்பையொட்டி முன்தினம் இரவு ஏராளமான சுற்றுலாப் பயணிகள் தாவர வியல் பூங்காவில் குவிந்தனர். இதையொட்டி நடந்த இசை நிகழ்ச்சியில் நாட்டுப்புறப் பாடல், பாட்டுக் கச்சேரி, மேஜிக் ஷோ, டி.ஜே., மெகா ஷோ என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மேலும், பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட பூங்கா ஜொலித்தது. புத்தாண்டு தினத்தையொட்டி நடைபெற்ற இசை இரவு நிகழ்ச்சி சுற்றுலாப் பயணிகளை வெகுவாக கவர்ந்தது.
