தமிழ்நாடு குழந்தைகள் உரிமை ஆணைய உறுப்பினராக பழநி வக்கீல் தேர்வு

பழநி, ஜன. 24: குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் குழந்தைகள் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சங்களை ஆய்வு செய்வது, குழந்தைகள் பயங்கரவாதம், வீடுகளில் வன்முறைக்கு ஆளாக்கப்படுதல், சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல், துன்புறுத்தப்படுதல், பாலுணர்வை தூண்டும் நடவடிக்கைகள், விபச்சாரம் உள்ளிட்டவற்றால் பாதிக்கப்பட்டு தங்கள் உரிமைகளை அனுபவிப்பதற்கு முட்டுக்கட்டையாக உள்ள அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்யும் அமைப்பாகும். ஒரு வழக்கை விசாரிக்கும் சிவில் நீதிமன்றத்திற்குரிய அதிகாரங்கள் இந்த ஆணையத்திற்கும் உள்ளது. குழந்தை உரிமை மீறல்கள் தொடர்பாக சமர்பிக்கப்பட்ட புகார்களை விசாரிக்கவும், தாமாகவே முன்வந்து ஒரு வழக்காக பதிவு செய்து விசாரிக்கவும் இந்த ஆணையத்திற்கு அதிகாரம் உள்ளது. இந்த ஆணையத்திற்கு புதிய தலைவர் மற்றும் 6 உறுப்பினர்களை தமிழக அரசு நியமித்துள்ளது. இதில் பழநி அருகே கணக்கன்பட்டியை சேர்ந்த பழநி வழக்கறிஞர்கள் சங்கத்தின் முன்னாள் செயலாளர் ராமராஜ் ஒரு உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இவரை கந்தவிலாஸ் பாஸ்கரன் மற்றும் சக வழக்கறிஞர்கள், நகர முக்கிய பிரமுகர்கள் பாராட்டி வாழ்த்தினர்.

Related Stories: