×

தனிப்படை போலீசை வெட்டிய வாலிபர் நீதிமன்றத்தில் சரண்

திருச்சி, ஜன.24: திருச்சியில் தனிப்படை காவலரை கத்தியால் தாக்கிய வாலிபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். மற்றொருவரை போலீசார் கைது செய்து முக்கிய நபரை தேடி வருகின்றனர். திருச்சி சங்கிலியாண்டபுரம் எம்ஜிஆர் நகரை சேர்ந்தவர் சுப்ரமணியன் மகன் விஜய் (23). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதால் பாலக்கரை போலீசார் மற்றும் தனிப்படையினர் தேடி வந்தனர். கடந்த 21ம் தேதி இரவு தனிப்படை காவலர் வேல் (எ) வேல்முருகன் (32) சங்கிலியாண்டபுரத்தில் இருந்து கிராப்பட்டியில் உள்ள வீட்டிற்கு பைக்கில் சென்றபோது பிளவர் மில் அருகே முன்னால் மொபட்டில் விஜய், இவரது நண்பர் மணப்பாறையை சேர்ந்த யுவராஜ் (21), சங்கிலியாண்டபுரம் அண்ணா நகரை சேர்ந்த ஜெயபாண்டியன் ஆகிய மூவரும் பைக்கில் சென்றனர். மடக்கி பிடிப்பதற்காக காவலர் வேல் வேகமாக சென்று விஜய்யை மறித்து நின்றார்.

அப்போது உடனிருந்த நண்பர் யுவராஜ் மறைத்து வைத்திருந்த கத்தியால் காவலரின் தலையில் வெட்டிவிட்டு 3 பேரும் தப்பினர். தலையில் ரத்தக் காயமடைந்த காவலர் அங்கிருந்த தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பொன்மலை போலீசார் கொலைமுயற்சி உள்பட 2 பிரிவின் கீழ் வழக்குபதிந்து தேடி வந்தனர். இதில் நேற்று யுவராஜ், ஜேஎம் 2 நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை நீதிமன்ற காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டதை அடுத்து சிறையில் அடைக்கப்பட்டார். மேலும் ஜெயபாண்டியனை தனிப்படை போலீசார் நேற்று கைது செய்தனர். தலைமறைவாக உள்ள விஜய்யை தேடி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஜெயபாண்டியன் ஒரு பைப் நிறுவனத்தில் வேலை முடிந்து நடந்து வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவரை பார்த்த விஜய், வலுக்கட்டாயமாக தனது வண்டியில் ஏற்றிச்சென்றபோது சம்பவத்தில் சிக்கி கைது செய்யப்பட்டார்.

Tags : juvenile court ,
× RELATED விளாத்திகுளத்தில் துணை ராணுவ படை போலீசார் கொடிஅணிவகுப்பு