ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரின் அடையாளமாகத் திகழும் ‘பிங்க் சிட்டி’ எனப்படும் பழைய நகரப் பகுதியில், சுற்றுலாப் பயணிகளின் வருகையை முன்னிட்டு பேட்டரி ரிக்ஷாக்களுக்கு நிர்வாகம் அதிரடித் தடை விதித்துள்ளது. இந்த முடிவால் சுமார் 30,000 ஓட்டுநர்கள் வேலையிழந்துள்ளதோடு, பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
ஆண்டு இறுதி மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக ஜெய்ப்பூருக்கு லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். பழைய நகரத்தின் குறுகிய சாலைகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த, கடந்த டிசம்பர் 20-ஆம் தேதி முதல் பேட்டரி ரிக்ஷாக்களை இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது.
ஜெய்ப்பூர் முழுவதும் சுமார் 80,000 பேட்டரி ரிக்ஷாக்கள் இயங்கி வரும் நிலையில், பழைய நகரத்தில் மட்டும் இயங்கிய 30,000 ரிக்ஷாக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் ஓட்டுநர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. வழக்கமாக 10 முதல் 20 ரூபாயில் பயணம் செய்த மக்கள், இப்போது ஆட்டோக்களுக்கு 50 ரூபாய்க்கும் மேல் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். தடையை மீறி இயக்கப்படும் ரிக்ஷாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
“போக்குவரத்து நெரிசலுக்குப் பேட்டரி ரிக்ஷாக்கள் மட்டுமே காரணமல்ல. நடைபாதை ஆக்கிரமிப்புகள் மற்றும் பிற வாகனங்களின் விதிமீறல்களுமே முக்கியக் காரணங்கள். எங்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பது முறையல்ல” என ஓட்டுநர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும், சில நிபந்தனைகளுடன் தங்களை மீண்டும் அனுமதிக்க வேண்டும் என்று கோரி பல்வேறு இடங்களில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
தற்போது இந்தத் தடை ஜனவரி 10-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு ரிக்ஷாக்களின் பதிவு சரிபார்க்கப்படும். வண்ணக் குறியீடு முறை அறிமுகப்படுத்தப்படும். குறிப்பிட்ட வழித்தடங்கள் ஒதுக்கப்படும். இந்த நடைமுறைகள் முழுமையாக முடிவடைய இன்னும் இரண்டு மாதங்கள் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
