புதிய வேளாண் சட்டம் ரத்து கோரி தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தஞ்சை, ஜன.24: போராடிப் பெற்ற தொழிலாளர் நலச் சட்டங்களை மாற்றி, கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாக, தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய பாஜக மோடி அரசு கொண்டு வந்துள்ள சட்டங்களை ரத்து செய்ய கோரி தஞ்சாவூர் ரயிலடியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் சேவியர் தலைமை வகித்தார். ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார் துவக்கி வைத்தார். சிஐடியூ மாநில செயலாளர் ஜெயபால் முடித்து வைத்து பேசினார்.

விவசாயிகள், தொழிலாளர்கள், பொதுமக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு மூன்று புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

பறிக்கப்படுகின்ற உரிமைகளையும், கொள்ளையடிக்கும் வளங்களையும் தடுத்து நிறுத்தாமல் மத்திய அரசுக்கு துணை போகும் தமிழக அரசைக் கண்டித்தும், மோடி அரசிடம் உரிமைகளைக் கேட்டுப் பெற வலியுறுத்தியும், நாடு தழுவிய 26ம் தேதி நடைபெறுகிற விவசாயிகள் டிராக்டர் பேரணிக்கு ஆதரவாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில், தஞ்சையில் இருசக்கர வாகன அணிவகுப்பு நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் ஐஎன்டியூசி மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், ஏஐசிசிடியூ மாவட்ட செயலாளர் ராஜன், ஏஐடியூசி மாவட்ட தலைவர் சேவையா, சிஐடியூ மாவட்ட தலைவர் கோவிந்தராஜூ, வங்கி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் அன்பழகன், ஏஜடியூசி மாவட்ட துணை செயலாளர் மதிவாணன், சங்க பொதுச் செயலாளர் அப்பாத்துரை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: