×

மாவட்டம் முழுவதும் மராமத்து பணிகள் செய்யாததால் சேதமடைந்து வரும் சாலைகள்

புதுக்கோட்டை, ஜன. 24: போதிய மராமத்து பணிகள் செய்யாததால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பெரும்பாலான சாலைகள் சேதமடைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகள் உள்ளது. தற்போது உள்ளாட்சி பிரதிநிகள் யாரும் பதவியில் இல்லாததால் சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பஞ்சாயத்துக்கு தேவையான பணிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக ஒரு பஞ்சாயத்துக்கு தமிழக அரசு சார்பில் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.25 ஆயிரம் வரை பொது நிதி ஒதுக்கப்படுகிறது. இந்த நிதியில் பஞ்சாயத்துக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர முடியவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் கிராம பஞ்சாயத்துகளில் உள்ள அதிகமான சாலைகள் தற்போது சேதடைந்துள்ளது. இதனால் அந்த சாலைகளில் மக்கள் வாகனத்தில் செல்லும்போது விபத்து ஏற்படுகிறது.

இல்லையென்றால் வாகனங்கள் சேதடைகிறது. மேலும் கனரக வாகனங்களை இயக்க முடியவில்லை. அவசர காலங்களில் குறித்த நேரத்தில் குறித்த இடத்துக்கு செல்ல முடியாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலைகளை போதிய பராமரிப்பு பணிகள் செய்யாததால் தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. இதை ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் கண்டுகொண்டதாக தெரியவில்லை. எனவே சேதமடைந்த சாலைகளை கண்காண்த்து மாவட்ட நிர்வாகத்திடம் முறையாக தெரிவித்து நிதி பெற்று மராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருவாரியான கிராமங்களில் சாலைகளை மராமத்து பணிகள் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்ட சாலைகளை பராமரிக்காததால் தொடர்ந்து சேதமடைந்து வருகிறது. ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக உள்ளது. சேதமடைந்த சாலைகளில் செல்லும்போது மக்கள் விபத்தில் சிக்கி காயமடைகின்றனர். ஒரு சில நேரங்களில் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. சாலைகள் சரியான முறையில் இருந்தால் விபத்துகள் குறையும் என்பதில் சந்தேகமில்லை.

கிராமங்களில் உள்ள சாலைகளின் நிலை குறித்து மக்கள் பிரதிநிதிகள், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு அளிப்பர். தற்போதுள்ள அதிகாரிகளும் கண்டுகொள்வதாக தெரியவில்லை. மேலும் ஒரு சில இடங்களில் தார்சாலைகள் இல்லை. பல ஆண்டுகளாக மண் சாலையை பயன்படுத்தும் குக்கிராமங்கள் உள்ளன. இப்படி பல்வேறு கிராமங்களில் மக்கள், உரிய சாலை வசதிகள் இல்லாமல் தினம்தோறும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் ஒவ்வொரு கிராமமாக சென்று சாலைகளின் உள்ள நிலை குறித்து பார்வையிட்டு உண்மை நிலவரம் குறித்து அறிக்கை தயாரித்து மாவட்ட நிர்வாகத்திடம் கொடுக்க வேண்டும். அப்போது மாவட்ட நிர்வாகம், அரசிடம் தெரிவித்து உரிய நிதி பெற்று சாலைகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செய்தால் மாவட்டத்தில் உள்ள கிராம சாலைகள் பிரச்னைக்கு ஓரளவுக்கு தீர்வு கிடைக்கும். இதே நிலை தொடர்ந்தால் இன்னும் சில மாதங்களில் ஒரு சில கிராமங்களில் தார்சாலைகள் இருந்ததற்கான அறிகுறிகள் இல்லாமல் போய் விடும். இதனால் அதிகாரிகள் தகுந்த முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

Tags : Roads ,district ,
× RELATED பங்குனி உத்திரத்தை ஒட்டி...