டவுன் ஹாஜி நியமிக்காததை கண்டித்து முற்றுகை போராட்டம்

பெரம்பலூர், ஜன. 24: பெரம்பலூர் மாவட்டத்துக்கு டவுன் ஹாஜி நியமிக்காததைக் கண்டித்து, விரைவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவதென மனிதநேய மக்கள் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. பெரம்பலூரில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில், கட்சியின் களப் பணியாளர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கட்சியின் நகர பொறுப்புக் குழுத் தலைவர் முஹம்மது சித்திக் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் சுல்தான் மொய்தீன். மாவட்ட செயலர் மீரா மொய்தீன், மாவட்ட துணை செயலர் முகமது அனிபா, இளைஞரணி மாவட்ட செயலர் இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சமூக நீதி படைப்பாளர் சங்க மாநிலச் செயலர் தாஹிர் பாட்சா, நதிகள் பாதுகாப்பு கூட்டியக்கத்தின் மாநில அமைப்பாளர் தமிழகன், இஸ்லாமிய அழைப்பாளர் நாசர் அலிகான். பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலச் செயலர் வழக்குரைஞர் காமராசு ஆகியோர் களப் பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

பயிற்சி நிறைவில் நடந்த கூட்டத்தில், வரும் சட்டப்பேரவை தேர்தலில் திமுக கூட்டணியின் வெற்றிக்கு பாடுபடுவது. பிப். 2ம் தேதி திருச்சியில் நடைபெறும் மனிதநேய மக்கள் கட்சியின் மத்திய மண்டல பொதுக்குழுவில் திரளாக பங்கேற்பது. பெரம்பலூர் மாவட்டம் உருவாகி 25 ஆண்டுகள் கடந்த நிலையில், இதுவரை டவுன் ஹாஜி நியமிக்கப்படாமல் இருப்பதைக் கண்டித்து விரைவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக நிர்வாகி ரஷீத் அஹமது வரவேற்றார். மாவட்ட துணைச் செயலர் சையது உசேன் நன்றி கூறினார்.

Related Stories:

>