×

தங்கம் விலையில் தொடர்ந்து மாற்றம் 4 நாளில் பவுனுக்கு ரூ.5,280 குறைந்தது; வெள்ளியும் போட்டி போட்டு சரிகிறது: புத்தாண்டிலும் விலை குறைவால், நகை வாங்குவோர் மகிழ்ச்சி

சென்னை: தங்கம் விலை தொடர்ந்து 4 நாட்களில் பவுனுக்கு ரூ.5280 குறைந்துள்ளது. புத்தாண்டான நேற்றும் பவுனுக்கு ரூ.320 குறைந்ததால் நகை வாங்குவோர் மகிழ்ச்சியடைந்தனர். வெள்ளியும் போட்டி போட்டு சரிந்து வருகிறது. தங்கம், வெள்ளி விலை ஆண்டு இறுதியான டிசம்பர் மாதத்தில் தாறுமாறாக உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை பதிவு செய்தது. இதன் ஒரு பகுதியாக கடந்த 15ம் தேதி ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டியது. பின்னர் சற்று விலை குறைந்தது.

அதன் பிறகு மீண்டும் 22ம் தேதிக்கு பிறகு தங்கம் விலை ஒரு பவுன் ரூ.1 லட்சத்துக்கும் குறையாமல் விலை அதிகரித்து கொண்டே இருந்தது. தொடர்ந்து கடந்த 27ம் தேதி ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 4 ஆயிரத்து 800க்கு விற்பனையாகி வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டது. இதனால், நகை வாங்குவோர் கடும் அதிர்ச்சியடைந்தனர்.

அதே நாளில் வெள்ளி ஒரு கிலோ ரூ.2 லட்சத்து 85 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் எட்டிப் பிடித்தது. மேலும் தங்கம், வெள்ளி விலை அதிகரிக்குமோ என நகை வாங்குவோர் கடும் அச்சத்தில் இருந்து வந்தனர். ஆனால், அவர்கள் எதிர்பார்ப்புக்கு மாறாக தங்கம் விலை குறைய தொடங்கியது. 28ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் தங்கம், வெள்ளி விலையில் மாற்றம் ஏற்படவில்லை. தொடர்ந்து 29ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.640 குறைந்து ஒரு பவுன் ரூ.1,04,160க்கு விற்பனையானது.

இதேபோல வெள்ளி விலையும் கிலோவுக்கு ரூ.4,000 குறைந்து, பார் வெள்ளி 2 லட்சத்து 81 ஆயிரத்துக்கு விற்பனையானது. 30ம் தேதி தங்கம் விலை பவுனுக்கு ரூ.3,360 குறைந்து ஒரு பவுன் ரூ.1 லட்சத்துக்கு 800க்கு விற்பனையானது. வெள்ளி கிலோவுக்கு ரூ.23,000 குறைந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 58 ஆயிரத்துக்கு விற்பனையானது. தொடர்ந்து நேற்று முன்தினம் தங்கம் விலை குறைந்தது.

அதாவது காலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.400 குறைந்து ஒரு பவுன் ரூ.1,00,400க்கு விற்பனையானது. மாலையில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.560 குறைந்து ஒரு பவுன் ரூ.99,840க்கும் விற்றது. நேற்று முன்தினம் ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.960 வரை குறைந்தது. இதன் மூலம் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்துக்கு கீழ் வந்தது. இதனால், நகை வாங்குவோர் சற்று மகிழ்ச்சிடைந்தனர்.

இந்த நிலையில், 2026ம் ஆண்டின் முதல் நாளான நேற்றும் தங்கம், வெள்ளி விலை குறைய தான் செய்தது. அதாவது நேற்று காலையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,440க்கும், பவுனுக்கு ரூ.320, குறைந்து ஒரு பவுன் ரூ.99,520க்கும் விற்பனையானது. இதன் மூலம் தங்கம் விலை தொடர்ச்சியாக 4 நாட்களில் மட்டும் பவுனுக்கு ரூ.5,280 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கம் விலையை போல வெள்ளி விலையும் நேற்று காலையில் கிராமுக்கு ரூ.1 குறைந்து, ஒரு கிராம் ரூ.256க்கும், கிலோவுக்கு ரூ.1,000ம் குறைந்து, பார் வெள்ளி ரூ.2 லட்சத்து 56 ஆயிரத்துக்கும் விற்பனையானது. புத்தாண்டு நேரத்தில் மேலும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் தங்கம், வெள்ளி விலை குறைவு என்பது தற்காலிகம் தான் என்றும், இனிவரும் நாட்களிலும் இப்படி ஏற்றம், இறக்கம் நீடிக்கும் என்றும் வியாபாரிகள் தெரிவித்தனர்.

Tags : Chennai ,New Year's Eve ,
× RELATED முதல் நாளே குட் நியூஸ்…! சென்னையில்...