×

வைத்தீஸ்வரன்கோவில் பகுதியில் மருத்துவ குணங்கள் நிறைந்த பம்பளிமாஸ் பழம் விற்பனை படுஜோர்

சீர்காழி, ஜன. 24: சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோயில் சுற்றுவட்டார பகுதியில் வீட்டு தோட்டங்களில் பம்பளிமாஸ் அதிகளவில் காணப்படுகிறது. இந்த பம்பளிமாஸ் பழம் கோடை காலத்தில் சாப்பிடுவது உடல் சூட்டை தணிக்கும் என்று உணவியல் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பம்பளிமாஸ் பழம் சாத்துக்குடி, ஆரஞ்சு வகையை சேர்ந்தது. இந்த பழம் பச்சை நிறத்தில் பெரிய பந்துபோல இருக்கும். முற்றிய காயின்மேல் இளம்மஞ்சள் நிறத்தில் மாறும் அதுதான் பழம். இதன் தோல் அழுத்தமாக காணப்படும். உள்ளே சாத்துக்குடிபோல சுளைகள் இருக்கும். சிலவகை வெள்ளை சுளைகளை கொண்டிருக்கும். சிலவற்றின் சுளைகள் ரோஸ் நிறத்தில் காணப்படும். இது அனைத்து காலங்களிலும் கிடைக்காது அதற்கான சீசனில் மட்டுமே கிடைக்கும்.

கோடைக்காலத்தில் அதிக வெயிலில் அலைபவர்கள், அதிக சூடுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்களின் உடல் வெகுவிரைவில் வெப்பமடையும். இவர்கள் பம்பளிமாஸ் பழச்சாறு குடித்து வந்தால் உடல்சூடு தணியும். இந்த பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம் உள்ளது. கண் பார்வை கோளாறுகள் நீங்க வைட்டமின் ‘ஏ’ சத்து அவசியம். இந்த வைட்டமின் ‘ஏ‘ சத்து குறைவதால் மாலைக் ண் நோய் ஏற்பட வாய்ப்புண்டு. இந்த குறைகளை களைய பம்பளிமாஸ் பழம் சிறந்த மருந்தாகும். காரட் எப்படி கண்களை காக்கிறதோ அதேபோல் பம்பளிமாஸ் பழமும் காக்கும். பம்பளிமாஸ் பழத்தில் சுண்ணாம்புச்சத்தும் உள்ளதால் பித்த சூட்டை அகற்றும். நோய் பாதிப்பால் உடல் இளைத்து போனவர்கள் மதிய நேரத்தில் பம்பளிமாஸ் பழத்தை சாப்பிடலாம்.

இதனால் உடல் பலமடையும், சோர்வு நீங்கும். மஞ்சள் காமாலை நோயின் தாக்கம் குறைய பம்பளிமாஸ் பழம் நல்லது. இதுபோன்று பல்வேறு மருத்துவ குணம் கொண்ட பம்பளிமாஸ் பழங்கள் தற்போது ஆங்காங்கே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல் சீர்காழி பகுதியிலும் பம்பளிமாஸ் பழம் விற்பனை செய்யப்படுகிறது. வைத்தீஸ்வரன் கோயில் நான்கு வீதிகளிலும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பழம் ரூ.40 முதல் ரூ.80 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த பம்பளிமாஸ் பழம் சீசனில் மட்டுமே கிடைக்கும் என்பதால் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Tags : area ,Vaitheeswarankoil ,
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...