தலைவாசல் அருகே மினி டெம்போ கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பலி 20 பேர் படுகாயம்

ஆத்தூர்,  ஜன.24: தலைவாசல் அருகே துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்ள மினி டெம்போவில்  சென்றபோது வாகனம் கவிழ்ந்த விபத்தில் 2 பெண்கள் பலியாகினர். டிரைவர் உள்பட  20 பேர் படுகாயமடைந்தனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகே உள்ள புத்தூர்  கிராமத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், ஆத்தூர் அருகேயுள்ள கல்லாநத்தம்  கிராமத்தில் நடந்த துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மினி டெம்போவில் நேற்று  காலை சென்றனர். வாகனத்தை கிராமத்தை சேர்ந்த துரைராஜ்(45) என்பவர்  ஓட்டிச்சென்றார். ஊனத்தூர் ஏரிக்கரை அருகே சென்ற போது, திடீரென டிரைவரின்  கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் கவிழ்ந்து விவசாய நிலத்தில்  விழுயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ராணி (48) என்பவர் சம்பவ  இடத்திலேயே உயிரிழந்தார். டிரைவர் துரைராஜ் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்டோர்  படுகாயமடைந்தனர்.

தகவல் அறிந்து சம்பவ  இடத்துக்கு வந்த தலைவாசல் போலீசார், ராணியின் சடலத்தை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த  20 பேர், ஆத்தூர் அரசு மருத்துவமனையிலும், டிரைவர் துரைராஜ் சேலம் அரசு  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். இந்நிலையில்,  மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வேடியம்மாள் (55) என்பவர்,  சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து  தலைவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல்

ஓமலூர் அடுத்த  நச்சினம்பட்டியை சேர்ந்த ராணுவ வீரர் முத்து (34). இவர் கடந்த சில  ஆண்டுகளுக்கு முன்பு சிக்கம்பட்டியில் நிலம் வாங்கியதில், இவருக்கும்  சிக்கம்பட்டியை சேர்ந்த சின்னு (45) என்பவருக்கும் முன் விரோதம்  இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம், முத்துவுக்கு சொந்தமான  நிலத்தில் இருந்த கம்பி வேலியை அகற்றிய சின்னு, தட்டி கேட்ட முத்துவுக்கு  கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து முத்து அளித்த புகாரின் பேரில்,  தாரமங்கலம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரிக்கின்றனர்.

விவசாயிகள் கண்டுணர்வு சுற்றுலா

அட்மா திட்டத்தின் கீழ், 50 விவசாயிகள்  தேனீ வளர்ப்பு பயிற்சி பெற, அயோத்தியாப்பட்டணம் அடுத்த ராமலிங்கபுரம் அம்ருதா  தேனி பண்ணைக்கு அழைத்துசெல்லப்பட்டனர். வேளாண் உதவி  இயக்குநர் நீலாம்பாள் முன்னிலை வகித்தார். பண்ணை தலைவர் ராகேஷ்,  விவசாயிகளுக்கு பயிற்சி மற்றும் செயல்  விளக்கமளித்தார். பயிற்சி ஏற்பாடுகளை வட்டார தொழில்நுட்ப மேலாளர் இந்துமதி,  உதவி  தொழில்நுட்ப மேலாளர் கார்த்திகேயன், தாழ்குழலி ஆகியோர் செய்திருந்தனர்.

Related Stories:

>