சென்னை: வணங்குவதற்கு அடிக்கடி கால்களை மாற்றுபவர், வேட்டியை மாற்றியதாக அமைச்சர் ரகுபதியை கேலி செய்வதா என எடப்பாடி பழனிசாமிக்கு திமுக வர்த்தகர் அணி செயலாளர் காசிமுத்து மாணிக்கம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:
திருப்போரூர், கும்மிடிப்பூண்டி கூட்டத்தில் பேசிய எடப்பாடி, ‘‘ரகுபதி என்று ஒருவர் இருக்கிறார். வேஷ்டியை மாற்றுபவர், அன்றைக்கு ஒரு எட்டப்பன், இன்றைக்கு ரகுபதி, துரோகத்தின் வடிவமாக இருக்கிறார் என்று பேசியுள்ளார். அழகுக்கு மறுபெயர் பெண்ணா அல்லி மலருக்கு மறுபெயர் கண்ணா தமிழுக்கு மறுபெயர் அமுதா என்பது போல் துரோகத்துக்கு மறுபெயர் எடப்பாடி தான், முதலில் ஜெயலலிதா, சசிகலா கால், ஓ,பி.எஸ் இப்போது மோடி, அமித்ஷா கால் என விழுவதற்கு கால்களை அடிக்கடி மாற்றிக் கொள்பவர் எடப்பாடி, ரகுபதியின் குற்றச்சாட்டுக்கு பதில் கூறாமல் அவரை கட்சி மாறினார் என்று மட்டும் சொல்வது நியாயமா? கந்தனுக்கு ஆறுமுகம், துரோகத்தில் எட்டப்பன் எடப்பாடிக்கு முகத்தில் துரோக முத்திரை நூறு முகம், தனக்கு அடைக்கலம் தந்த சசிகலாவையே கட்சியை விட்டு நீக்கியவர்.
1989ல் தனக்கு எம்.எல்.ஏ சீட் பெற காரணமாக இருந்த நடராஜன் மரணத்திற்கு கூட தானும் செல்லாமல், அதிமுக அமைச்சர்களையும், கட்சிக்காரர்களையும் போகவிடாமல் செய்த நன்றி கெட்டவர். செங்கோட்டையனை முதல்வராக்க நினைத்திருந்த சசிகலா, தனக்காக பல கோணங்களில் பேசி புரியவைத்து தன்னை முதல்வராக்கிய தினகரனை வழக்கில் மாட்டிவிட்டு, கட்சியை விட்டு தூக்கி வீசியவர்.
37 எம்.பிக்கள் தமிழக ஆட்சியுடன் வந்து பொறுப்பேற்று விட்டு, இன்று 0-வாக பத்து தோல்வி பழனிசாமி என்கிற பட்டத்துடன் அதிமுகவிற்கே துரோகம் செய்திட்ட எட்டப்பன் எடப்பாடி, 2024 நாடாளுமன்ற தேர்தல் வரை தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வசித்துவிட்டு, தேர்தலுக்கு சில வாரமே இருக்க, பாஜகவை கழட்டிவிட்டு, பாஜகவுக்கு துரோகம் செய்தவர். மற்றவர்களை சொல்வது, ஆலமரத்தைப் பார்த்து காற்று அடித்தால் அடிக்கடி வளையாதே என நாணல் சொன்னது மாதிரி உள்ளது. எடப்பாடிக்கு எனது கண்டனத்தை தெரரிவித்துக் கொள்கிறேன்.
