×

ராமாக்காள் ஏரியில் நடைபாதையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

தர்மபுரி, ஜன.24: தர்மபுரி ராமக்காள் ஏரியில் சேதமடைந்துள்ள நடைபாதையை முறையாக பராமரிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி- கிருஷ்ணகிரி சாலையில் நகர எல்லையில், பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் 265 ஏக்கர் பரப்பளவில் ராமாக்காள் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக்கு சின்னாற்றில் இருந்து கால்வாய் மூலம் தண்ணீர் வந்து சேரும். இங்கிருந்து வெளியேறும் உபரிநீர் சனத்குமார நதியில் கலந்து, கம்பைநல்லூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் சேருகிறது. இந்த ஏரி முழுமையாக நிரம்பும்போது கடல்போல் காட்சியளிக்கும். தற்போது, சின்னாறு அணையில் இருந்து ராமாக்காள் ஏரிக்கு தண்ணீர் வருவதில்லை. இதனால், கடந்த 10 ஆண்டுகளாக ஏரி நிரம்பாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில், கடந்த திமுக ஆட்சியில் நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் பங்களிப்புடன் ஏரியில் பறவைகள் தங்கு வகையில் தீவு திடல் அமைக்கப்பட்டது.

₹2.81 கோடி மதிப்பீட்டில் பூங்கா, இளைப்பாறுவதற்கு இருக்கை, நடைபயிற்சி மேற்கொள்ள நடைமேடை, மரச்செடிகள் மற்றும் வேலி அமைக்கப்பட்டது. முறையாக பராமரிக்காததால், பூங்காவில் செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. நடைபயிற்சி மேடை கற்கள் பெயர்ந்து சிதறியுள்ளது. குடிமகன்கள் மது பாட்டில்களை அங்கயே வீசிச்செல்கின்றனர். பிளாஸ்டிக் பை, டம்ளர், பாட்டில்கள் குவிந்து கிடக்கின்றன. எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை தூர்வார வேண்டும். கழிவுநீர் நேரடியாக கலக்காத  வகையில் சுத்திகரித்து அனுப்ப மாவட்ட நிர்வாகம், நகராட்சி துறை, பொதுப்பணித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sidewalk ,Ramakkal Lake ,
× RELATED ஆவடி செக்போஸ்ட் அருகே சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம்