×

பழவேற்காடு மீனவ கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவமனை வேண்டும்: மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் கோரிக்கை

பொன்னேரி: மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய பழவேற்காடு மீனவ கிராமங்களுக்கு நடமாடும் மருத்துவமனை வசதி செய்து தரக்கோரி மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ரவி(திமுக) மருத்துவ சுகாதார துறை அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக மீஞ்சூர் ஒன்றிய பெருந்தலைவர் ரவி திருவள்ளூர் மாவட்ட மருத்துவ சுகாதார துறை அதிகாரிகளிடம் கொடுத்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: பழவேற்காடு ஊராட்சியில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கர்ப்பிணிகளுக்கு மருத்துவம் பார்க்க போதிய மருத்துவர்கள் இல்லாததால் பழவேற்காடு பகுதியில் வசிக்கும் ஏராளமான கர்ப்பிணிகள் மெதூர் மற்றும் காட்டூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவ சேவைகளை பெற்றுக்கொள்கின்றனர். இதன் காரணமாக கர்ப்பிணிகள் 8வது மாதம் வரை கூட கர்ப்பிணிகளுக்கான பதிவு செய்ய முடியாமல் அவதிப்படுகின்றனர்.

அதனால் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அரசு சலுகை கிடைக்க முடியாமல் போகிறது. மேலும், போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் கர்ப்பிணிகள் வெகுதூரம் சென்று மருத்துவ வசதி பார்க்க முடியவில்லை. எனவே, கர்ப்பிணிகளின் நலனை கருத்தில் கொண்டு பழவேற்காடு அரசு பொது மருத்துவமனைக்கு வாரத்தில் இரண்டு முறை மருத்துவர்கள் சென்று மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ உதவி செய்து தரவேண்டும். அவர்களின் இன்னல் போக்கிட உதவி செய்யும் வகையில் அரசு மருத்துவமனைக்கு நடமாடும் மருத்துவ உதவி சேவை செய்து தர வேண்டும். மேலும், வளரிளம் பெண்களுக்கு கொடுக்க வேண்டிய முறையான மருத்துவ ஆலோசனைகளையும் இனிவரும் காலங்களில் செய்து தரவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Fruit fishing villages ,hospital ,
× RELATED பழவேற்காடு மீனவ கிராமங்களுக்கு...