கூடுதல் நிதி வழங்க கோரி ஊராட்சி தலைவர்கள் கலெக்டரிடம் மனு

திருவள்ளூர்: கூடுதல் நிதி உட்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, திருவள்ளூர் மாவட்ட ஊராட்சி தலைவர்கள் கூட்டமைப்பு சார்பில் மாவட்ட தலைவர் சுமிதா சுந்தர், செயலாளர் சதாபாஸ்கரன், மாநில செயற்குழு உறுப்பினர் ஜெ.கோவர்த்தனம், பொருளாளர் ஜி.சிட்டி கிருஷ்ணம நாயுடு, துணைத்தலைவர் எஸ்.ரமணி சீனிவாசன் ஆகியோர் கலெக்டர் பொன்னையாவிடம் கொடுத்த கோரிக்கை மனுவின் விபரம் வருமாறு: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளுக்கு மக்கள் தொகை அடிப்படையில் மாநில நிதிக்குழு மானியம் நிதி ஒதுக்க வேண்டும். பேரிடர் காலங்களில் செலவு செய்யப்பட்ட தொகையை விடுவிக்க வழிவகை செய்ய வேண்டும். ஊராட்சிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளுக்கான நிர்வாக அனுமதி நகலை வழங்க வேண்டும். முன்னுரிமை பணிக்கான தொகையை விடுவிக்க வேண்டும்.

ஊராட்சிகளின் ஆய்வுக்கு செல்லாமல் இருக்கும் கிராம ஊராட்சி பிடிஓ க்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஊராட்சிக்கு தேவையான உபகரணங்களை ஊராட்சிகள் கொள்முதல் செய்து கொள்வது, 14 மற்றும் 15 வது நிதி குழு மானியத்தில் ஊராட்சியே டெண்டர் வைத்து பணிகள் மேற்கொள்வது, ஊராட்சி கணக்கு எண் 2 ல் உள்ள உபரி நிதியை ஊராட்சி கணக்கு எண் 1 க்கு மாற்றி தருவது, ஊராட்சிமன்ற தலைவர்களுக்கும் மாத ஊதியம் வழங்குவது, தேவையான ஊராட்சிக்கு ஊராட்சி செயலாளர்களை இடமாற்றம் செய்து தருவது, பம்ப் ஆப்ரேட்டர், துப்புரவு பணியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள் தேவைப்பட்டால் ஊராட்சி நிர்வாகமே பணியாளர்களை நியமனம் செய்வது உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றவேண்டும்.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது. இந்த மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டர் பொன்னையா இதுகுறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

Related Stories: