திசையன்விளை, டிச.31: நெல்லை மாவட்டம் திசையன்விளை இடையன்குடி மெயின்ரோடு தனியார் மருத்துவமனை அருகில் அம்ருத் திட்டத்தின் கீழ் இல்லம்தோறும் குடிநீர் வழங்குவதற்காக பிரதான குடிநீர் குழாய் பதிக்கப்பட்டு வருகிறது. அதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் சரக்கு ஏற்றி வந்த லாரியின் டயர் பதிந்து லாரி சரிந்தது. இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் லாரியில் உள்ள சரக்குகளை வேறொரு வாகனத்தில் மாற்றி பாரத்தை குறைத்து சரக்கு லாரி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. திசையன்விளை பகுதியில் குடிநீர் குழாய்கள் பதிக்க தோண்டப்பட்டு மூடப்பட்ட இடத்தில் தொடர்ந்து இதுபோன்று வாகனங்கள் பதிந்து வருவதால் குழாய் பதிக்கும் பணிகளில் ஈடுபடும் ஒப்பந்ததாரர்கள் குழிகளை முறையாக உறுதியாக வாகனங்களுக்கு விபத்து ஏற்படாத வண்ணம் மூட வேண்டும் எனவும், பணிகள் நடைபெறும் இடங்களில் எச்சரிக்கை பலகைகள் வைக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
