நாசரேத் டிச. 31: இடையன்விளையில் நடந்த ஸ்தோத்திரப்பெருவிழாவில் திரளானோர் பங்கேற்றனர். நாசரேத் அருகே உள்ள இடையன்விளை இம்மானுவேல் ஜெபவீட்டின் 77வது ஆண்டு ஸ்தோத்திரப்பெருவிழா, நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடந்தது. நாலுமாவடி சேகரகுரு ஆபிரகாம் ரஞ்சித் ஆரம்ப ஜெபம் செய்தார். ஊழியர் பொன்சீலி சாமுவேல் வரவேற்றார். இம்மானுவேல் ஜெபக்குழுவினர் இன்னிசையோடு பாடல்கள் பாடினர். தூத்துக்குடி மவுண்ட் சர்ச் பாஸ்டர் கார்த்தி சி.கமாலியேல், செய்தி கொடுத்தார். சிறப்பு பாடல்கள், சாட்சிகள் இடம்பெற்றன. இதில் நாசரேத், குரும்பூர், இடையன்விளை, மூக்குப்பீறி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராம மக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். ஓய்வுபெற்ற குருவானவர் ஜெரேமியா நிறைவு ஜெபம் செய்தார். ஏற்பாடுகளை இடையன்விளை இம்மானுவேல் ஜெபக்குழு பொறுப்பாளர் ஊழியர் பொன்சீலி சாமுவேல் மற்றும் ஜெபக்குழுவினர் செய்திருந்தனர்.
