×

அரசியல் நிலவரம் குறித்து புதுச்சேரி திமுக நிர்வாகிகளுடன் ஜெகத்ரட்சகன் எம்பி ஆலோசனை

புதுச்சேரி, டிச. 31: தமிழகம், புதுச்சேரியில் 2026 சட்டசபை பொதுத் தேர்தலுக்கான ஆயத்த பணிகளை அரசியல் கட்சிகள் தொடங்கி விட்டன. ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்ட நிலையில், எத்தனை தொகுதியில் போட்டியிடுவது, யார், யாரை எங்கு வேட்பாளராக நிறுத்துவது என்பது தொடர்பான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளன. இதற்காக கட்சியினரிடம் விருப்ப மனுக்களையும் பெற்று வருகின்றன. இதனிடையே புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் தங்களது கட்சி நிர்வாகிகளிடம் பொதுத்தேர்தல் தொடர்பான ஆலோசனைகளை மேற்கொண்டு தொகுதி வாரியாக களப்பணிகளையும் முடுக்கி விட்டுள்ளனர். இதேபோல் புதுச்சேரியிலும் திமுக- காங்கிரஸ் கூட்டணி தொடர்பான இறுதி முடிவுகளை தங்களது கட்சித் தலைமை முடிவெடுத்து விரைவில் அறிவிக்கும் என மாநில தலைமைகள் கூறி வருகின்றன.

இதனிடையே வழுதாவூரில் உள்ள வீட்டில் ஜெகத் ரட்சகன் எம்பியை புதுச்ேசரி மாநில திமுக அமைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமையில் எம்எல்ஏக்கள் அனிபால் கென்னடி, நாஜிம், செந்தில்குமார், நாக.தியாகராஜ், சம்பத் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் சந்தித்து ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பின்போது புதுச்சேரியின் தற்போதைய அரசியல் சூழல், தேர்தல் கூட்டணி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுச்சேரி வருகை உள்ளிட்டவை குறித்து விவாதித்ததாக கூறப்படுகிறது. மேலும் ஆளுங்கட்சியின் மக்கள் விரோத செயல்பாடுகளை எந்தெந்த வகையில் மக்களிடம் கொண்டு செல்வது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.

Tags : Jagadrakshagan ,Puducherry DMK ,Puducherry ,2026 Assembly general elections ,Tamil Nadu ,
× RELATED திருத்தணி முருகன் கோயிலில் இன்று திருப்படி திருவிழா