மகாலிங்கபுரம் காமராஜர் வீதியில் வேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து

பொள்ளாச்சி, ஜன.22: பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காமராஜர் வீதியில், அதிவேகமாக செல்லும் வாகனங்களால் விபத்து தொடர்ந்து நடந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பொள்ளாச்சி நகரின் மையப்பகுதியில் உள்ள மகாலிங்கபுரம் பகுதி, குடியிருப்பு மிகுந்த இடமாக உள்ளது. இந்த பகுதியில், கனரக வாகனங்கள் மற்றும் பஸ் போக்குவரத்து குறைவாக இருந்தாலும், பகல் மற்றும் இரவு நேரத்தில் இருசக்கர வாகனம் உள்ளிட்ட பல வாகன போக்குவரத்து அதிகமாக உள்ளது. இதில், வாகன போக்குவரத்து அதிகமுள்ள காமராஜர் வீதியில் 5 ஆண்டுகளுக்கு முன்பு ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருந்தன.

சற்று குறுகலான இடம் போல் இருந்ததால், அப்பகுதியில் குறிப்பிட்ட இடத்தில் வேகத்தடை அமைக்கப்பட்டன. பின்னர், அதனை அப்புறப்படுத்தி, அந்த வீதியில் புதிதாக ரோடு போட்டு அகலப்படுத்தப்பட்டன. ஆனால், இந்த காமராஜர் வீதியில் கடந்த சில ஆண்டுகளாக அதிவேகமாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகளால், அடிக்கடி விபத்து நடந்து வருகிறது.கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 5க்கும் மேற்பட்ட விபத்து நடந்துள்ளது. நேற்று ரேஷன் கடைக்கு சென்று காமராஜர் வீதி வழியாக வந்த ரேவதி, சித்ரா என்ற இரு பெண்கள் மீது, அந்த வழியாக வேகமாக வந்த பைக் ஒன்று மோதியது.இந்த விபத்தில், இரு பெண்களும் படுகாயமடைந்ததுடன், பைக்கில் வந்த நபரும் காயமடைந்தார்.

இதில், சித்ராவின் காலில் முறிவு ஏற்பட்டது. இதையறிந்த அப்பகுதியினர், அந்த பெண்ணை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இதுகுறித்து மகாலிங்கபுரம் போலீசார் விசாரிக்கின்றனர். வாகன போக்குவரத்து, மக்கள் நடமாட்டம் மிகுந்த காமராஜர் வீதியில் வேகத்தடை இல்லாததால், வாகன ஓட்டிகள் வேகமாக வருவதும், அடிக்கடி விபத்து நடப்பதும் வாடிக்கையாக உள்ளது. எனவே, அப்பகுதியில் ஆங்காகே வேகத்தடை அமைத்து விபத்து தொடர்வதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>