திருச்சியில் டாஸ்மாக் கடை பூட்டை உடைத்து ரூ.31,000 மதிப்பிலான மது பாட்டில்கள் திருட்டு சிசிடிவி கேமரா உடைப்பு

திருச்சி, ஜன.22: திருச்சி மாநகர் மாவட்டத்தில் 186 டாஸ்மாக் கடைகள் உள்ளது. இதில் வரகனேரி பிச்சைநகரில் 10513 எண் கொண்ட டாஸ்மாக் கடை உள்ளது. இதன் அருகில் மற்றொரு டாஸ்மாக் கடையும் உள்ளது. நேற்றுமுன்தினம் இரவு 10 மணிக்கு வழக்கம்போல் ஊழியர்கள் கடையை பூட்டிவிட்டு சென்றனர். கடையை ஒட்டியுள்ள மதுக்கடை பாரும் பூட்டப்பட்டது. இந்நிலையில நேற்று மதியம் 12 மணிக்கு கடையை திறக்க வந்த டாஸ்மாக் ஊழியர்கள் கடையின் ஷட்டர் 2 பூட்டுகள் இரண்டும் உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று சோதனை செய்தபோது, கடையில் இருந்த மதுபாட்டில்களை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. திருடப்பட்ட மதுவின் மதிப்பு ரூ.31,190 என தெரியவந்தது. ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் உள் பகுதிகளில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

மர்ம ஆசாமிகள் சிசிடிவி கேமராவை அடித்து உடைத்து விட்டு மதுபாட்டில்களை அள்ளி சென்றனர். மேலும், அருகில் உள்ள பாரில் ஏறி குதித்த மர்ம ஆசாமிகள், அங்கிருந்து சிசிடிவி கேமராவையும் உடைத்து சேதப்படுத்தினர். அங்கு எதுவும் இல்லாததால் மதுபாட்டில்களுடன் சென்றது தெரியவந்தது. இதுகுறித்து வழக்குபதிந்த காந்திமார்க்கெட் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல் கொரோனா ஊரடங்கின்போது கடந்த ஏப்ரல் மாதம் இதே டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.11 ஆயிரம் மதிப்புள்ள மதுபாட்டில்கள் கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து அனைத்து டாஸ்மாக் கடைகளில் இருந்த மதுபாட்டில்களை எடுத்து திருச்சி கலையரங்கம் திருமண மண்டபம் மற்றும் தேவர்ஹாலில் பாதுகாப்பாக வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>