×

வடுகப்பட்டியில் நார் தொழிற்சாலையால் நிலத்தடி-பாசன வாய்க்கால் நீர் மாசுபாடு

*கலெக்டரிடம் மனு

ஈரோடு : வடுகப்பட்டியில் நார் தொழிற்சாலையில் இருந்து வெளியேற்றும் கழிவுநீரால் நிலத்தடி நீர் மற்றும் பாசன வாய்க்கால் நீர் மாசுபாடு ஏற்படுவதாக பொதுமக்கள் ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

ஈரோடு கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கந்தசாமி தலைமை தாங்கினார்.

இதில், மொடக்குறிச்சி தாலுகா வடுகப்பட்டி பேரூராட்சி குட்டக்காட்டுபுதூர், பெரியகாடு, கஸ்தூரிபா கிராமம் பகுதி மக்கள் மனு வழங்கி கூறியதாவது: எங்கள் பகுதியில் நூற்றுக்கணக்கான வீடுகள் உள்ளன. அப்பகுதி முற்றிலும் விவசாயம் சார்ந்த நிலமாகும்.

அங்குள்ள தொங்கனத்தான் குட்டை அருகே உள்ள பூமி தான இயக்க நிலத்தில், சில தென்னை நார் பிரித்தெடுத்தல், கயிறு மற்றும் தேங்காய் நார் பித் செய்யும் ஆலைகள் செயல்படுகின்றன.

அந்த ஆலையின் தேங்காய் நாருடன் அதிக அளவில் தண்ணீர் சேர்த்துத்தான், பிரித்தெடுக்கும் பணி நடக்கும். அதில் வெளியேறும் கழிவை சுத்திகரிப்பு செய்யாமல் கீழ்பவானி வாய்க்காலிலும், ஆலை வளாக குழிகளிலும் வெளியேற்றுகின்றனர். தவிர நார் கழிவுகளை வாகனங்களில் கொண்டு சென்று எங்காவது கொட்டி செல்கின்றனர்.

அதனால், நிலத்தடி நீரும், கீழ்பவானி வாய்க்கால் நீரும் மாசுபட்டு குடிக்க முடியவில்லை. சமையலுக்கும், கால்நடை குடிநீராகவும் பயன்படுத்த முடியவில்லை. விவசாய நிலங்களும் பாதிக்கிறது. இதுபற்றி மாசு கட்டுப்பாட்டு வாரியம் உட்பட பல இடங்களில் மனு வழங்கியும் நடவடிக்கை இல்லை. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர்.

அந்தியூர் தாலுகா, அண்ணாமடுவு, காந்தம்பாளையம் கிராமத்தில் உள்ள அனைத்து மக்கள் முன்னேற்ற நலச்சங்கத்தினர் கலெக்டரிடம் வழங்கிய மனுவில் கூறியிருப்பதாவது:

அந்தியூர் அருகே மாத்தூர் கிராமத்தில் 685.58 ஏக்கர் நிலம், பூமி காடாக வருவாய் துறை நிலப்பதிவில் உள்ளது. இந்த இடத்தில் வீரமாத்தி அம்மன் கோவில், கருப்புசாமி கோவில் கிணறு உள்ளது.

இக்கிணறு மூலம் இப்பகுதியில் 50 ஆண்டுக்கு முன் விவசாயம் செய்யப்பட்டதற்கான ஆவணங்கள் உள்ளன. கடந்த 1995ம் ஆண்டு ஈரோடு கலெக்டரிடம் முறையிட்டபோது, அப்போது இருந்த கலெக்டர் அந்நிலத்தை விவசாய பயன்பாட்டுக்காக வழங்குவதாக உறுதியளித்தார்.

1996ம் ஆண்டு சட்டமன்ற பேரவை குழு தலைவர் வந்தபோதும், நிலத்தை எங்களுக்கு வழங்க பரிந்துரைத்தார். இந்நிலத்தை அப்பகுதி மக்கள் விவசாயம் செய்ய வழங்க வேண்டும். விவசாயம் செய்வதன் மூலம், இப்பகுதி மக்கள் வாழ்வாதாரம் பெறுவர். விளை நிலமும் அதிகரிக்கும் என கூறியுள்ளனர்.

பவானி தாலுகா குறிச்சி செல்லிகவுண்டனூர் காலனியை சேர்ந்த மக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:எங்கள் பகுதியில் 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல ஆண்டாக வசிக்கிறோம். காலனி அருகே உள்ள இடத்தை மயானமாக பல ஆண்டாக பயன்படுத்தி வருகிறோம்.

மயானத்துக்கு அருகே உள்ள சிலர் மயான இடம் தங்களுக்கு சொந்தமானது எனக்கூறி, ஆக்கிரமித்து கொண்டனர். தற்போது மயானம் இல்லாமல், இறப்பவர்களது இறுதி சடங்கை செய்ய இயலாமலும், மயானத்தை ஆக்கிரமிப்பில் விட்டதால் சிரமப்படுகிறோம். அவ்விடத்தை மாவட்ட நிர்வாகம் அளவீடு செய்து, மயானத்தை மீட்டுத்தர வேண்டும், என கூறியிருந்தனர்.

தமிழ் புலிகள் கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமையில் பொதுமக்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: கோபி தாலுகா வளையபாளையம், எரங்காட்டூர், வரப்பள்ளம், பெருமுகை, நஞ்சகவுண்டன்பாளையம் பகுதியில், 800க்கும் மேற்பட்ட அருந்ததியர் வகுப்பை சேர்ந்தவர்கள் வசிக்கிறோம். பல ஆண்டுகளுக்கு முன் எங்களுக்கு அரசு வழங்கிய இடத்தில் தற்போது, 3, 4 குடும்பங்களாக வாழ்கிறோம்.

ஒரே வீட்டில், 3 தலைமுறையினர் வசிக்கிறோம். நாங்கள் விவசாய கூலி தொழிலாளர்களாக உள்ளதால், எங்களுக்கு நிலம் வாங்கவும், வீடு கட்டவும் வசதி இல்லை. அப்பகுதியில் உள்ள அரசு புறம்போக்கு இடங்களில் எங்களுக்கு தனித்தனியாக வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கூறியுள்ளனர்.

இதேபோல், சத்தியமங்கலம் தாலுகா குத்தியாலத்தூர் அருகே கானகத்தூர், கரளயம், சோளத்தூர், பிள்ளையார் பிரிவு போன்ற பகுதியில் வசிக்கும் பழங்குடி ஊராளி சமூகத்தை சேர்ந்தவர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

எங்கள் பகுதியை சேர்ந்தவர்களுக்கு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் அரசின் சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பட்டாவுக்கு உரிய இடத்தை எங்களிடம் காண்பித்து, அளவீடு செய்து தராததால், அவ்விடத்தை பயன்படுத்த முடியவில்லை. எனவே அவ்விடத்தை அளவீடு செய்து, எங்களுக்கான இடத்தை பிரித்து வழங்க வேண்டும், என கூறியிருந்தனர்.

Tags : Vadugapatti ,Collector ,Erode ,Erode Collector ,
× RELATED சாயர்புரம் சுற்றுவட்டார கிராமங்களில் மஞ்சள் குலை விளைச்சல் அமோகம்