*50 ஏக்கர் நெற்பயிர் நீரில் மூழ்கியது
நாகர்கோவில் : அகஸ்தீஸ்வரம் அருகே நான்கு வழிச்சாலை பால பணிக்காக குளத்தில் போடப்பட்ட தற்காலிக கரை உடைப்பால், அருகில் உள்ள வயலுக்குள் தண்ணீர் பாய்ந்து, 50 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கின. கன்னியாகுமரி முதல் காரோடு வரையிலான நான்கு வழிச்சாலை பணிகள் நடக்கின்றன. இந்த பணிகள் 65 சதவீதம் முடிவடைந்து இருக்கிறது.
அதாவது மொத்தம் உள்ள 53.714 கி.மீ. தூரத்தில், 35 கி.மீ. முடிவடைந்து உள்ளது. இன்னும் சுமார் 20 கிலோ மீட்டர் மட்டுமே முடிவடைய வேண்டி இருக்கிறது. இந்த பணிகள் 2026 ஏப்ரல் 16ம் தேதிக்குள் முடிக்கப்படும் என அதிகாரிகள் கூறி உள்ளனர்.
தற்போது கன்னியாகுமரி – காரோடு இடையே வழுக்கம்பாறை, புத்தேரி, தோட்டியோடு ஆகிய பகுதிகளில் பாலப்பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. இதில் அகஸ்தீஸ்வரம் நாடான்குளம் – கொட்டாரம் இடைப்பட்ட பகுதியில் உள்ள பன்றிக்குன்று குளத்திலும் நான்கு வழிச்சாலைக்காக பாலம் அமைந்துள்ளது.
இந்த குளத்தில் நான்கு வழிச்சாலை பணிகள் தடைபடாமல் இருக்க குளத்தின் கரை பகுதியில் தற்காலிக கரை அமைத்து பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் பால பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து தற்காலிகமாக போடப்பட்ட கரையை உடைத்தனர். ஏற்கனவே இருந்த கரையை பலப்படுத்தாததால் குளத்தில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வெளியேறி தெற்குவடுகன்பற்று அடுத்த ஞானபழம்பற்று பகுதியில் உள்ள வயலுக்குள் புகுந்தது.
இதில் சுமார் 50 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின. தண்ணீரில் வந்த மணல் நிரம்பி வயல் முழுவதும் மணல் மேடானது. இதன் அருகில் உள்ள தென்னந்தோப்பு மற்றும் வாழை தோட்டத்திலும் தண்ணீர் நிரம்பியது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த எட்டு தினங்களுக்கு முன் தான் இந்த பகுதியில் உள்ள வயல்களில் நடவுப் பணி நடந்தது.
நடப்பட்ட நெற்பயிர்கள் தற்போது தண்ணீரில் மூழ்கியுள்ளன. இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.உடனடியாக உடைக்கப்பட்ட கரை பகுதியை சரி செய்யும் பணி நடைபெற்றது. இதற்கிடையே நடவு செய்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில் ஏற்பட்ட இழப்பை சரிசெய்ய நகாய் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.
தளவாய் சுந்தரம் எம்எல்ஏ நேரில் ஆய்வு
குளம் உடைப்பு குறித்து தகவல் கிடைத்ததும் தளவாய்சுந்தரம் எம்எல்ஏ நேரில் சென்று பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை பார்வையிட்டார். பின்னர் அவர் தெரிவிக்கையில், உடைப்பு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்குரிய விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பன்றி குன்று குளம் உடைப்பை சரிசெய்ய தேசிய நெடுஞ்சாலை ஆணைய துறையினர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கான நிதியினை உடனடியாக ஒதுக்கீடு செய்து பணிகளை நிறைவேற்ற வேண்டும் என்றார்.
