தேசிய பால்வள வாரியம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு ஊட்டச்சத்து பால்

ஊட்டி,ஜன.22: ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய பால்வள வாரியம் சார்பில் பால் வழங்கப்பட்டது. ஓடைக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு தேசிய பால்வள வாரியம் சார்பில் கடந்த 2018ம் ஆண்டு முதல் ஊட்டச்சத்து பால் வழங்கப்பட்டு வருகிறது. இதனை கலெக்டர் இன்னசென்ட் திவ்யா துவக்கி வைத்தார். தொடர்ந்து, இரு ஆண்டுகளாக மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மூடப்பட்டன.

இதனால், மாணவர்களுக்கு தொடர்ந்து ஊட்டசத்து பால் வழங்கப்படவில்லை. இந்நிலையில், இந்த ஊட்டச்சத்து பால் வழங்கும் திட்டம் மீண்டும் துவக்கப்பட்டுள்ளது. தலா 200 மி.லி., வீதம் ஜனவரி மாதத்திற்கு தேசிய பால் வள வாரியம் சார்பில் பால் பாக்கெட்டுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் பள்ளிகளுக்கு வராத நிலையில், அவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு அழைக்கப்பட்டு, மாணவர்களுக்கு வழங்க மொத்தமாக வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஷோபா கலந்துக் கொண்டு பெற்றோர்களுக்கு ஊட்டச்சத்து பால் பாக்கெட்டுக்களை வழங்கியது மட்டுமின்றி, கொரோனா காலத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விளக்கி பேசினார்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>