சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பேரணி

கோவை, ஜன.22: சாலை பாதுகாப்பு  வாரத்தை முன்னிட்டு கோவை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மகளிர்  மட்டுமே பங்கேற்ற ஹெல்மெட் குறித்த இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணி  நடைபெற்றது. இப்பேரணியை கலெக்டர் ராஜாமணி  துவக்கி வைத்து பேசியதாவது: மக்களிடையே சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக  ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

மக்கள் அதிகம் கூடும் இடங்களான பேருந்து நிலையங்கள், சுங்கச்சாவடிகள்  போன்ற இடங்களில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்துதல், பள்ளி, கல்லூரி  மாணவர்களுக்கு இணையவழி விழிப்புணர்வு வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட  பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளன. கோவை மாவட்டத்தில் 2019ம் ஆண்டு  வாகன விபத்துகளால் ஏற்பட்ட உயிரிழப்புகளை விட 2020ம் ஆண்டு வாகன  விபத்துகளில் 34.5 சதவீதம் உயிரிழப்புகள் குறைந்துள்ளன. போக்குவரத்து  விதிகளை கடைபிடிப்பதன் மூலமே விபத்துகளைக் குறைக்க முடியும்.

இவ்வாறு அவர் பேசினார்.முன்னதாக, ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியானது மத்திய  வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் துவங்கி, மகளிர் பாலிடெக்னிக்,  காந்திபுரம் வழியாக வ.உ.சி. மைதானம் வந்தடைந்து,  மீண்டும் மத்திய வட்டார  போக்குவரத்து அலுவலகத்தில் நிறைவடைந்தது. இதில், மாநகர காவல் ஆணையர் (போக்குவரத்து)  முத்தரசு, மண்டல போக்குவரத்து இணை ஆணையர் உமாசக்தி, வட்டார போக்குவரத்து  அலுவலர்கள் பாஸ்கரன், குமரவேல், சரவணன், சிவகுருநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: