கீழ்பவானி பாசன பகுதிகளில் இன்று முதல் நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

ஈரோடு, ஜன. 22: கீழ்பவானி பாசன பகுதிகளில் இன்று முதல் 20 இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி பாசனத்திற்குட்பட்ட 1 லட்சத்து 3 ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் தண்ணீர் திறக்கப்பட்டதையடுத்து நெல் பயிரிடப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் நெல் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டன. ஒரு சில பகுதிகளில் நெற்பயிர்கள் வயல்களில் சாய்ந்து சேதமடைந்தன.

இந்நிலையில் அறுவடை பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருவதையடுத்து அறுவடை செய்யப்பட்ட நெல்லினை கொள்முதல் செய்வதற்காக கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. மொத்தம் 20 இடங்களில் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ள நிலையில், முதல்கட்டமாக நசியனூர், பவானி, அம்மாபேட்டை, நாகரணை, உக்கரம், கவுந்தப்பாடி, பெரியபுலியூர், பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று  22ம் தேதி திறக்கப்பட உள்ளது. கொடுமுடி, அஞ்சூர், வெள்ளோடு, வாய்க்கால்புதூர், கே.ஜி.வலசு, மொடக்குறிச்சி, அரச்சலூர், தட்டாம்பாளையம், அவல்பூந்துறை, எழுமாத்தூர், சிவகிரி, கஸ்பாபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் 25ம் தேதியும் திறக்கப்பட உள்ளது.

ஏற்னவே செயல்பாட்டில் உள்ள புதுவள்ளியம்பாளையம், கரட்டடிபாளையம், காசிபாளையம், பொலவக்காளிபாளையம், காஞ்சிக்கோவில், பெத்தாம்பாளையம், கணபதிபாளையம் உள்ளிட்ட கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கொள்முதல் நிலையங்களில் ஏ கிரேடு நெல் குவிண்டாலுக்கு ரூ.1958ம், சாதாரண நெல் ரூ.1918க்கும் கொள்முதல் செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related Stories:

>