மேகமலை வனப்பகுதியில் இருந்து சந்தைக்கு விளைபொருட்களை கொண்டு செல்ல கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

தேனி, ஜன. 22: தேனி மாவட்ட ஊராட்சி மன்ற கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் பிரீத்தா நடேசன் தலைமை வகிக்க, துணை தலைவர் ராஜபாண்டியன் முன்னிலை வகித்தார். செயலாளர் பரமசிவன் வரவேற்றார். இதில் ஊராட்சி கவுன்சிலர்கள் கலந்து கொண்டு விவாதத்தில் பங்கேற்றனர்.கூட்டத்தில் நடந்த விவாதம் வருமாறு: கவுன்சிலர் இளவழுதிபாண்டியன்: மேகமலை வனச்சரக பகுதியில் இந்திரா நகர், பொம்முராஜபுரம், அரசரடி, மஞ்சனூத்து உள்ளிட்டகிராமங்கள் உள்ளன.

இங்கு 80 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயிகள் குடியிருந்து வருகின்றனர். இப்பகுதிகளில் விளையும் காய்கறிகள் உள்ளிட் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வதற்கு வனத்துறை 2 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கிறது. இந்த வாகனங்கள் போதுமானதாக இல்லை. எனவே விவசாயிகள் தங்கள் நிலங்களில் விளையும் விளைபொருள்களை சந்தைக்கு கொண்டு செல்ல கூடுதல் வாகனங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்றார்.வனத்துறை அதிகாரி: மேகமலை வனப்பகுதியானது வனச்சரணாலயமாக மாற்றப்பட்டுள்ளது.

எனவே மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை எந்த வாகனமும் செல்ல அனுமதிக்க முடியாது. அனுமதிக்கப்பட்ட நேரத்தில் வனத்துறை அங்கீகரித்த வாகனங்கள் மட்டும் சென்று வர அனுமதி உண்டு’ என்றார். ப்ரீத்தா (தலைவர்):  இதுகுறித்து வனத்துறை விரிவான அறிக்கையை மன்றத்திற்கு அளித்திட வேண்டும். ராஜபாண்டியன் (துணைத் தலைவர்): ஊராட்சிகளில் ஆடு, மாடு வழங்குவதற்கான பயனாளிகள் பட்டியல் தேர்வு செய்வதில் பாரபட்சம் உள்ளது கவுன்சிலர்கள் அளிக்கும் தகுதியான பட்டியல்களை ஊராட்சி மன்றத்தில் கவனத்தில் எடுத்து கொள்வதில்லை.

எனவே கவுன்சிலர்கள் வழங்கும் பட்டியலில் தகுதி உள்ளவர்களுக்கும் திட்டத்தின் பயன்பாடு சென்று சேர வேண்டும்.

இதேபோல தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் இயந்திர வாகனங்கள் மூலமாக விவசாய பணிகளை மேற்கொள்ள கூடாது. முழுமையாக மனித திறன் மூலமாகவே பணிகளை மேற்கொள்ள வேண்டும்’ என்றார்.கவுன்சிலர் பாண்டியன்: சுமார் 50 ஆயிரம் வாக்குகளை பெற்று கவுன்சிலர்களாக ஆகியிருக்கும் அரசு விழாக்கள் நடக்கும் போது எங்களுக்கு எந்த ஒரு தகவலும் தருவதில்லை. அழைப்பிதழும் அனுப்புவதில்லை. வேறு வழியில்லாமல் அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நிலை உள்ளது முறையாக அரசு நிகழ்ச்சிகளின்போது அழைப்பிதழ் அனுப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும். கவுன்சிலர் சந்திரசேகரன்:

எனது வார்டின் பல இடங்களில் மழைநீர் வடிகால் பணி நடத்தாமலேயே சாலைகள் போடும் பணிகள் நடக்கின்றன. இதனை கண்காணித்து மழைநீர் வடிகால் கட்டிய பின்பு சாலைகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கால்நடை பராமரிப்பு துறை, வனத்துறை , வேளாண்மை துறை, சுகாதாரத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: