பொதுமக்கள் நன்றி அரசு மானிய செலவீனம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம்

பொன்னமராவதி,ஜன.22: பொன்னமராவதி வட்டார வள மையத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஒருங்கிணைந்த பள்ளி மானிய செலவீனம் தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் 102 பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். பள்ளிக்கு வழங்கப்பட்ட மானியத் தொகையினை எவ்வாறு செலவு செய்வது மற்றும் அதற்கான கணக்குகள் மற்றும் பற்றுச்சீட்டுகள் பேணும் முறை குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. இக்கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் பால்டேவிட் ரொசாரியோ தலைமை வகித்தார். மேற்பார்வையாளர் செல்வக்குமார் முன்னிலை வகித்தார். மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட கணக்காளர் ஆல்பர்ட் கலந்து கொண்டு கணக்குகள் பராமரித்தல், வரவு செலவு எழுதுதல், எஸ்எம்சி தீர்மானம் எழுதுதல் சார்ந்து விரிவாக விளக்கமளித்தார். அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் தங்கள் திட்டக்கூறு செயல்பாடுகள் சார்ந்து பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு விளக்கினர்.

மேலும் கற்போம் எழுதுவோம் மையங்கள் நடைபெறும் தலைமையாசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்களுக்கான கூட்டமும் வட்டார கல்வி அலுவலர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மையங்களில் கற்போர்களின் வருகையை 100 சதவீதம் உயர்த்துதல், வருகைப்பதிவை இஎம்ஐஎஸ்ல் 100 சதவீதம் தினமும் பதிவிட்டு முடித்தல், பள்ளி ஆசிரியர்களும் கற்போம் எழுதுவோம் பயிற்சி மையங்களை அவ்வப்போது பார்வையிட்டு கற்போர்களின் வருகையை கண்காணித்து அதிகரிப்பது சார்ந்தும் விளக்கப்பட்டது. பள்ளி, குறுவள, வட்டார அளவில் தன்னார்வ வள குழு அமைத்தல் சார்ந்தும் தெரிவிக்கப்பட்டது. மேற்பார்வையாளர் உள்ளிட்ட அனைத்து ஆசிரியர் பயிற்றுநர்களும் கலந்து கொண்டனர்.

Related Stories: