அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில் முளைத்த நெற்கதிர்களுடன் நிவாரணம் கேட்டு மனு அளிக்க வந்த விவசாயிகள்

அரியலூர், ஜன.22: அரியலூர்-தொடர் மழையில் மூழ்கிய பல்லாயிரம் ஏக்கர் நெல், மக்காச்சோளம், உள்ளிட்ட பயிர்களுக்கு 100 சதவீதம் இன்சூரன்ஸ் மற்றும் முழு அளவில் நிவாரணம் வழங்க கோரி கலெக்டரிடம் விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர். அரியலூர் மாவட்டம் டெல்டா பகுதியான தா.பழூர் ஒன்றியத்தில் புயல் மற்றும் தொடர் கனமழை காரணமாக பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட நெற் பயிர் தண்ணீரில் சூழப்பட்டுள்ளது. அறுவடைக்கு தயாரான நெல்மணிகளும் வயல்களில் சாய்ந்து பயிர்கள் முளைத்து வீணாகிவிட்டது. இதுபோன்று மானாவரி பயிர்களான மக்காச்சோளம், மிளகாய், பருத்தி உள்ளிட்ட பயிர்களும் மழைநீரால் அழுகி விவசாயிகளுக்கு பெருத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண் துறை அதிகாரிகள் கணக்கெடுத்து நெற்பயிருக்கு முழு அளவிலான நிவாரணமும், பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு 100 சதவீத இன்சூரன்ஸ் தொகையை வழங்க கோரி, 10 கிராம விவசாயிகள் அரியலூர் கலெக்டர் ரத்னாவிடம் கோரிக்கை மனு அளித்தனர். கோடாலிகருப்பூர், தென்கச்சிபெருமாள்நத்தம், இடங்கண்ணி, கீழக்குடிகாடு, மேலக்குடிக்காடு உள்ளிட்ட 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் அழுகிய நெற்பயிர்களை எடுத்து வந்து தங்களது மனுவை கலெக்டரிடம் அளித்தனர்.

Related Stories: