இலங்கை தாக்குதலில் இருந்து தப்பிக்க முழுமையான முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்

நாகை, ஜன. 22: இலங்கை தாக்குதலில் இருந்து தப்பிக்க முழுமையான முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. தேசிய மீனவர் பேரவை துணைத்தலைவர் குமரவேலு தெரிவித்திருப்பதாவது: கடந்த 38 ஆண்டுகளாக இந்திய தமிழ் மீனவர்கள், இலங்கை கடற்படையால் பல்வேறு நாசகார செயல்களுக்கு உள்ளாகி கைதாகி சொத்துகளை இழந்து சிறையில் அடைந்து வாழ்விழந்து, குடும்பத்தை இழந்து மொத்தமாக தமிழ் மீனவர்கள் நிற்கதியாய் நிற்கின்றனர். இத்தனை ஆண்டுகளாகியும் இதற்கு முற்றுப்புள்ளியை மத்திய அரசும், தமிழக மாநில அரசும் வைக்கவில்லை. இதுவரை 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் சுட்டு தள்ளப்பட்டுள்ளனர். 2 மாதங்களுக்கு முன்புகூட இலங்கை நீதிமன்றம், இந்திய தமிழ் மீனவர்களின் 121 சிறை பிடிக்கப்பட்ட படகுகளை உடைத்து அழிக்குமாறு உத்தரவிட்டது. அதற்கு கூட மத்திய, அரசோ தமிழக அரசோ குறைந்தபட்சமாக கண்டனம் கூட தெரிவிக்கவில்லை.

தற்போது புதுகை மாவட்டம் கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற விசைப்படகை இலங்கை கடற்படையின் கப்பல் மோதி மீனவர்கள் படகு மூழ்கியது மட்டுமில்லாமல் 4 மீனவர்களும் காணாமல் போய்விட்டனர். அதில் 2 மீனவர்களின் உடல் யாழ்ப்பாணத்தில் ஒதுங்கியிருக்கிறது. மீதி 2 மீனவர்களை தேடி கொண்டிருக்கின்றனர். கோட்டைப்பட்டினத்தில் இருந்து மீன் பிடிக்க சென்ற எங்கள் இந்திய தமிழ் மீனவர்களை இலங்கை கடற்படை கப்பலை விட்டு படகில் மோதி எங்களை கொலை செய்கின்றனர். இந்த சூழலில் இலங்கைக்கு மத்திய, மாநில அரசுகளிடமிருந்து எந்த ஒரு கண்டனமும் இல்லை. நாங்களும் இந்தியாவில் தான் குடியிருக்கிறோம்.

இந்தியாவுக்கு அந்நிய செலாவணி மூலமாக ரூ.30 ஆயிரம் கோடிக்கு மேலாக ஆண்டுக்கு வருமானத்தை மீனவர்கள் ஈட்டி கொடுக்கிறோம். நாங்கள் இந்த நாட்டின் அரசியல் கட்சிகளுக்கு வெறும் ஓட்டு வங்கி மட்டும் தானா. நாங்கள் தினம்தினம் இலங்கை கடற்படையால் வாழ்வாதாரத்தை இழக்கிறோம். மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்காகவும், உயிர், உடமையின் பாதுகாப்புக்காக இலங்கையின் கொடூர தாக்குதலில் இருந்து பாதுகாக்க முழுமையான முடிவான முற்றுப்புள்ளியை உருவாக்க வேண்டும். எங்களுக்காக இலங்கைக்கு இதுவரை கண்டனம் செலுத்தாத மத்திய, மாநில அரசுகளை வன்மையாக கண்டிக்கிறோம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: