நெல்லை மாவட்டத்தில் நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது: அரிய வகை பறவைகள் புகைப்படமாக பதிவு

நெல்லை: தமிழகம் முழுவதும் வனத்துறை சார்பில் ஆண்டு தோறும் நீர்நிலைகளில் வாழும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடத்தப்பட்டு வருகிறது. களக்காடு வனத்துறை சார்பில் களக்காடு பச்சையாறு அணை கட்டுப்பகுதி, கீழப்பத்தை, பத்மநேரி பகுதிகளில் பறவைகள் கணக்கெடுக்கப்பட்டது. இதில் வனச்சரகர் பிரபாகரன் தலைமையில் வனவர் மதன்குமார் உள்பட வனத்துறையினர், பறவைகள் நல ஆர்வலர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் அடங்கிய மூன்று குழுவினர் கலந்து கொண்டனர்.

கணக்கெடுப்பின் போது தொலைநோக்கி கருவிகள் மூலம் பறவைகளின் வகைகள், நிறங்கள் உள்ளிட்டவைகள் கண்டறிந்து புகைப்படமாகவும் பதிவு செய்தனர். மேலும் கடையம் வனச்சரகத்திற்குட்பட்ட கடனாநதி, ராமநதி ஆகிய அணைகளில் இருந்து வரும் பறவைகள் குறித்தும் கணக்கெடுக்கப்பட்டது. சுமார் 40 பேர் இப்பணியில் ஈடுபட்டனர். இந்த கணக்கெடுப்பின் போது நீலவாய் தாமரை கோழி, பவளக்கால் உள்ளான், சின்ன மீன்கொத்தி, வென்மார்பு மீன் கொத்தி, சின்ன அரிவாள் மூக்கன், கருப்பு அரிவாள் மூக்கன், நத்தை கொத்தி நாரை,

நடுவாய் கொக்கு உள்ளிட்ட பறவைகள் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டன. இந்த கணக்கெடுப்பு பணி இன்றும் நடைபெற உள்ளது. கணக்கெடுப்பு பணிகள் முடிவடைந்தவுடன் எத்தனை பறவைகள் உள்ளன என்பது குறித்தும், கண்டறிப்பட்ட அரிய வகை பறவைகள் குறித்தும் வனத்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்படும் என்று பறவைகள் கணக்கெடுப்பு குழுவினர் தெரிவித்தனர்.

Related Stories: