சென்னை: அரசு கல்லூரி உதவி பேராசிரியர் தேர்வை தமிழகம் முழுவதும் 42 ஆயிரம் பேர் எழுதினர். அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகளில் 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித்தேர்வு நேற்று நடந்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வை தமிழகம் முழுவதும் 196 தேர்வு மையங்களில் 42,064 பேர் எழுதினர்.
காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை கட்டாய தமிழ் மொழித்தாள் தேர்வும், சம்பந்தப்பட்ட பாடத்தேர்வும் நடந்தன. பிற்பகல் 3 மணி முதல் 4 மணி வரை பொது அறிவு தாள் தேர்வும் நடந்தது. உதவி பேராசிரியர் தேர்வு தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் எஸ்.ஜெயந்தி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘‘உதவி பேராசிரியர் தேர்வில் 48 பாடங்கள் தொடர்பான 2708 காலியிடங்களுக்கு 47 ஆயிரத்து 48 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
இத்தேர்வில் காலையும், பிற்பகலும் 42,064 பேர் பங்கேற்றனர். ஒட்டுமொத்தமாக மாநிலஅளவில் 89.40 சதவீதம் பேர் தேர்வெழுதியுள்ளனர்’’ என கூறியுள்ளார். 50 மதிப்பெண்ணுக்கு நடத்தப்பட்ட கட்டாய தமிழ் தாள் தேர்வில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும்.
அப்போதுதான் தேர்வர்களின் மற்ற விடைத்தாள்கள் (பாடத்தேர்வு மற்றும் பொது அறிவு கட்டுரை தாள் தேர்வு விடைத்தாள்) மதிப்பீடு செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. பாடத்தேர்வுக்கு 150 மதிப்பெண்ணும், பொது அறிவு கட்டுரைத்தாள்தேர்வுக்கு 50 மதிப்பெண்ணும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட தேர்வான நேர்முத்தேர்வுக்கு 30 மதிப்பெண் வழங்கப்படும்.
