கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆரில் நீக்கப்பட்டது தொடர்பாக சம்மன் அனுப்பப்பட்ட 32 லட்சம் வாக்காளர்களிடம் விசாரணை தொடங்கியது. 3,234 மையங்களில் ஏராளமான மக்கள் குவிந்ததாக தேர்தல் அதிகாரி கூறி உள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகள் முடிந்த பிறகு 58 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டன.
இதில் பூர்த்தி செய்த படிவங்களில் குழப்பம் காரணமாக நீக்கப்பட்டவர்கள் 32 லட்சம் பேர் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் உரிய விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையம் சம்மன் அனுப்பி இருந்தது.
இதுதொடர்பான முதற்கட்ட விசாரணை நேற்று தொடங்கியது. இதற்காக மாநிலம் முழுவதும் 3,234 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 85 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வீடுகளுக்கே சென்று ஆவணங்களை சேகரிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* வங்கதேசம், ரோஹிங்கியாக்கள் எத்தனை பேர்?
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர் அபிஷேக் பாஜர்ஜி நேற்று அளித்த பேட்டியில், ‘‘2021 சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றதில் இருந்து ஒன்றிய அரசு எங்களை குறிவைத்து செயல்பட்டு வருகிறது. மேற்கு வங்கத்தில் ஏராளமான வங்கதேசத்தினர், ரோஹிங்கியாக்களுக்கு வாக்குரிமை அளித்திருப்பதாக மம்தா அரசு மீது குற்றம்சாட்டினர். இப்போது எஸ்ஐஆருக்கு பிறகு நீக்கப்பட்ட 58.20 லட்சம் பேரில் எத்தனை வங்கதேசத்தினர், ரோஹிங்கியாக்கள் என்ற தகவலை தேர்தல் ஆணையம் வெளிப்படுத்த வேண்டும்’’ என்றார்.
* எம்பி குடும்பத்தில் 4 பேர் பெயர் நீக்கம்
பாரசத் மக்களவை தொகுதியின் திரிணாமுல் காங்கிரஸ் எம்பி காகலி கோஷ் தஸ்திதார் எஸ்ஐஆருக்குப் பிறகு தனது குடும்பத்தில் 4 பேரின் பெயர் நீக்கப்பட்டதாக குற்றம்சாட்டி உள்ளார்.
* தலைமை தேர்தல் கமிஷனரை டிச.31 சந்திக்கிறது திரிணாமுல் குழு
மேற்கு வங்கத்தில் வாக்காளர் பட்டியலின் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடர்பான விவகாரம் குறித்து, 10 பேர் கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் குழு டிசம்பர் 31 அன்று தலைமைத் தேர்தல் கமிஷனர் ஞானேஷ் குமாரை சந்திக்க உள்ளது. அபிஷேக் பானர்ஜி மற்றும் டெரிக் ஓ பிரையன் ஆகியோர் அடங்கிய இந்தக் குழு எஸ்ஐஆர் பிரச்னை குறித்து விளக்கி கூறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* அசாமில் 10.56 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்
அசாமில் நடந்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்திற்குப் பிறகு 10.56 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. அசாம் மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகள் நடந்தன. அந்த பணிகள் முடிந்து நேற்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதன் மூலம் அசாமில் மொத்தம் 2,51,09,754 வாக்காளர்கள் உள்ளனர்.
மேலும் இறப்பு, இடமாற்றம் அல்லது பலமுறை பதிவு செய்தல் போன்ற காரணங்களால் 10,56,291 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன. வாக்காளர்கள் ஜனவரி 22 வரை உரிமைகோரல்களையும் ஆட்சேபனைகளையும் தாக்கல் செய்யலாம். இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 10 அன்று வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. நீக்கப்பட்ட 10.56 லட்சம் பெயர்களில், 4,78,992 பெயர்கள் இறப்புகளின் காரணமாக நீக்கப்பட்டன.
