கொடைக்கானலில் பிப்.1 முதல் பிளாஸ்டிக்கிற்கு தடை ஆலோசனை கூட்டத்தில் முடிவு

கொடைக்கானல், ஜன. 22: கொடைக்கானலில் பிளாஸ்டிக் மாசில்லா கொடைக்கானல் என்ற விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. சார் ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமை வகிக்க, நகராட்சி ஆணையாளர் நாராயணன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் உணவு பொருட்கள் கையாள பயன்படுத்தும் கையுறை, பிளாஸ்டிக் பேக் செய்யப்படும் பொருட்கள், பரிசு பொருட்கள் சுற்ற பயன்படும் பிளாஸ்டிக்குகள், லேமினேஷன் செய்யப்பட்ட பேக்கரி அட்டை பெட்டிகள், 5 லிட்டருக்கு குறைவாக உள்ள தண்ணீர்- குளிர்பான பிளாஸ்டிக் பாட்டில்கள், பெட் பாட்டில்கள் தடை குறித்து விவாதிக்கப்பட்டது.

தொடர்ந்து கூட்டத்தில் கொடைக்கானலில் வரும் பிப்.1ம் தேதி முதல் ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவுப்படி பிளாஸ்டிக்கிலான தண்ணீர் பாட்டில் உள்ள அனைத்து பொருட்கள் சுற்றுலா பயணிகள் கொண்டு வர தடை விதிக்கப்படுகிறது. தொடர்ந்து பிப்.7 முதல் உள்ளூர் கடைகளிலும் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. கொடைக்கானல் நுழைவுவாயில் சோதனை சாவடியில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு குறித்து பதாகைகள் வைக்கவுண், பிளாஸ்டிக்கை கொண்டு வரும் பயணிகளை கண்காணித்து அப்புறப்படுத்தவும் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

தண்ணீர் ஏடிஎம் பொதுமக்கள் கூடும் இடங்கள், சுற்றுலா தலங்கள், தங்கும் விடுதிகளில் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு வணிகர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. எனினும் வர்த்தக சங்கத்தினர் பிளாஸ்டிக் தடைக்கு கூடுதல் அவகாசம் வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: