×

சேலம் ரயில்வே கோட்டத்தில் நடக்கும் புதிய திட்ட பணிகளுக்கு பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்க வலியுறுத்தல்

சேலம், ஜன.22: சேலம் ரயில்வே கோட்டத்தில் நடக்கும் புதிய திட்டப்பணிகளுக்கு வரும் மத்திய பட்ஜெட்டில் கூடுதல் நிதி ஒதுக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. அதேபோல், சேலம்-நாமக்கல்-கரூர் வழித்தடத்தில் புதிய ரயில்களை இயக்கவும் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். மத்திய அரசின் பொது பட்ஜெட், அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படுகிறது. இதில், ரயில்வே திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் புதிய ரயில்வே திட்டங்கள்  அறிவிக்கப்படவுள்ளது. மேலும், பயணிகள் ரயில் இயக்கத்தை முழுமையாக கொண்டு வரும் அறிவிப்பும் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்த பட்ஜெட்டில் சேலம் கோட்ட பகுதியில் நடக்கும் புதிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்தவும், கூடுதல் ரயில்களை கோட்ட பகுதியில் இயக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது சேலம் கோட்டத்தில், சேலம்-விருத்தாச்சலம் பாதையை மின் மயமாக்கும் பணி நடந்து வருகிறது. அதேபோல், சேலம்-மேட்டூர் பாதையை இரட்டை வழிப்பாதையாக மாற்றி வருகின்றனர். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் இப்பணி முழுமையாக நிறைவடைந்துள்ளது. முழுமையாக நிறைவேற்றி, அப்பாதையை இயக்கத்திற்கு கொண்டு வர வேண்டும். இதற்காக கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதேபோல், சேலம், கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ரயில்வே ஸ்டேஷன்களில் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த அதிக நிதி ஒதுக்க கோரப்பட்டுள்ளது. இவை பட்ஜெட்டில் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அதிகாரிகள் உள்ளனர்.

மேலும், சேலம்-நாமக்கல்-கரூர் அகல ரயில்பாதையை மின் வழித்தடமாக மாற்றி விட்டனர். ஆனால், மிக குறைந்த அளவாக  சேலம்-கரூர் பாசஞ்சர், சென்னை-பழனி எக்ஸ்பிரஸ், சென்னை-மதுரை துரந்தோ எக்ஸ்பிரஸ், பெங்களூரு-நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. தற்போது, கொரோனா ஊரடங்கு காரணமாக மும்பை-நாகர்கோவில் சிறப்பு ரயில், இவ்வழியே இயக்கத்திற்கு வந்துள்ளது.
மின்வழித்தடமாக மாற்றிவிட்டதால்,புதிதாக கூடுதல் ரயில்களை சேலம்-நாமக்கல்-கரூர் மார்க்கத்தில் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களான மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரிக்கு இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும், திருச்சி மார்க்கத்தில் இயக்கப்படுகிறது. அந்த ரயில்களில் சிலவற்றை சேலம், நாமக்கல், கரூர், திண்டுக்கல், மதுரை வழியே இயக்க வேண்டும் என பயணிகள் கோரியுள்ளனர். அதுவும் பட்ஜெட் அறிவிப்புகளில் வரும் என்ற எதிர்பார்ப்பில் பயணிகள் உள்ளனர். இதுபற்றி ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், “கொரோனா ஊரடங்கு காலத்தில் நீண்டநாள் நிலுவையில் இருந்த தண்டவாள சீரமைப்பு மற்றும் பழைய ரயில்வே பாலங்களை புதுப்பித்தல் போன்றவை மேற்கொள்ளப்பட்டது. வரும் பட்ஜெட்டில், இரட்டை வழித்தட திட்டங்கள், மின் மயமாக்கும் திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்கப்படும் என எதிர்பார்கிறோம். அதேபோல், புதிய ரயில்கள், குறிப்பிட்ட வழித்தடங்களில் இயக்கத்திற்கு கொண்டு வரப்படும் அறிவிப்பும் வெளியாகும் என எதிர்நோக்கி இருக்கிறோம்,’’ என்றனர்.

Tags : railway line ,Salem ,
× RELATED மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு நிதி ஒதுக்கியதற்கு ஓபிஎஸ் நன்றி