மேட்டூர் ரவுடிகள் 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண்

சேலம், ஜன.22: பணம் கேட்டு தொழிலதிபரை கடத்தி சென்று மிரட்டிய வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடிகள் 2 பேர் சேலம் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.மேட்டூரைச்சேர்ந்தவர் பிரதாப். சூப்பர் மார்க்கெட் வைத்துள்ளார். இவர் குமார் என்பவரிடம் பல லட்சம் கடன் பெற்றுள்ளார். உடனடியாக பணத்தை கொடுக்க வேண்டும் என மிரட்டி பத்திரத்தில் கையெழுத்து பெற்றுக் கொண்டதுடன், வருவாயில் 40 சதவீதம் தரவேண்டும் என குமார் கூறியுள்ளார். மேலும் பிரதாப்பை கடத்தி சென்று மிரட்டியுள்ளார். அவரது கூட்டாளிகளும் பிரபல ரவுடிகளுமான ரகு(எ) மேட்டூர் ரகு(47), கோனூரைச்சேர்ந்த அரவிந்தன்(எ) மச்சஅரவிந்தன்(28) ஆகியோரும் சேர்ந்து கடத்தி தாக்கியுள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி வந்த பிரதாப், கொளத்தூர் போலீஸ் ஸ்டேசனில் புகார் செய்தார். இதையடுத்து பிரதாப் உள்பட சிலரை போலீசார் கைது செய்தனர். ரவுடிகள் மேட்டூர் ரகு, அரவிந்தன் ஆகியோர் தலைமறைவாக இருந்தனர். இவர்களை போலீசார் தேடி வந்தநிலையில், நேற்று சேலம் கூடுதல் மகளிர் நீதிமன்றதில் இருவரும் சரண் அடைந்தனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். மேட்டூரையே கலக்கிய பிரபல ரவுடி கூழை நாகராஜன் உள்பட சிலரது கொட்டம், அப்போதைய சேலம் எஸ்.பியாக இருந்த பொன்.மாணிக்கவேல் எடுத்த நடவடிக்கை  காரணமாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தற்போது ஏராளமான ரவுடிகள் சுதந்திரமாக மேட்டூர் பகுதியில் உலா வருகின்றனர். பொதுமக்களுக்கும் பெரும் அச்சுறுத்தலாகவும் இருந்து வருகிறார்கள். அவர்கள் மீது தற்போதைய எஸ்.பி.தீபாகனிக்கர் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories:

>