×

தொடர் மழையால் அழுகிய மக்காச்சோளம், பருத்தி பயிர்

கெங்கவல்லி,  ஜன. 22: வீரகனூர் சுற்றுவட்டாரத்தில் தொடர் மழை காரணமாக விவசாயிகள் பயிரிட்டிருந்த மக்காச்சோளம் மற்றும் பருத்தி ஆகியவை அழுகி வீணாகியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி உள்ளனர்.இதுகுறித்து வீரகனூர் ஏரிப்பாசன விவசாய நலச்சங்கத்தலைவர் ரவிச்சந்திரன், முதல்வருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: வீரகனூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள விவசாயிகள், சுமார் 11 ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவில் பருத்தி மற்றும் மக்காச்சோளம் சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால், அறுவடைக்கு தயாராக இருந்த பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. மக்காச்சோளம் கீழே சாய்ந்து மறுமுளைப்பு கொண்டுள்ளது.

வெடிப்பு விட்ட நிலையில் பருத்தி மழைநீரில் நடைந்து வீணாகியது. நிலத்தில் தண்ணீர் தேங்கி வடியாததால் மக்காச்சோளம் மற்றும் பருத்தி செடிகள் அழுகிப்போனது. ஒரு ஏக்கரில் மக்காச்சோளம் மற்றும் பருத்தி சாகுபடி செய்ய ₹30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம். எனவே, மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை, கலெக்டர் மற்றும் வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து,  முதல்வருக்கு அறிக்கை அனுப்பி அரசின் இழப்பீடு தொகையை பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Maize ,
× RELATED மக்காச்சோளத்தில் ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு குறித்து ஆய்வு