பாறை ஓவியங்கள், நடுகற்கள் விளக்க கருத்தரங்கம்

கிருஷ்ணகிரி, ஜன.22:  கிருஷ்ணகிரியில் அரசு அருங்காட்சியகமும், கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு குழுவும் இணைந்து, ஓவியங்கள் மற்றும் நடுகற்களில் தொறுபூசல்(கால்நடைகளை மீட்டல், கால்நடைகளை கவர்தல்) குறித்த சிறப்பு கருத்தரங்கினை நடத்தியது. கருத்தரங்கிற்கு ஆய்வுக்குழு தலைவர் நாராயணமூர்த்தி தலைமை வகித்தார். அரசு ஆடவர் மற்றும் மகளிர் கலைக்கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். தொல்லியல் ஆய்வாளர் சதானந்தகிருஷ்ணகுமார், பேராசிரியர் வாசுகி, வரலாற்று ஆசிரியர் ரவி ஆகியோர் பேசினர். கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் பேசியதாவது: ஜெகதேவி அருகே கீழ் சீனிவாசபுரத்திலிருந்து காட்டு வழியாக செல்லும் பாதையையொட்டி அமைந்துள்ள பன்னிகுண்டு என்ற பாறையின் குகை போன்ற அமைப்பில் இடப்புறம், வலப்புறம் என இரண்டு ஓவியத் தொகுதிகள் காணப்படுகின்றன. தமிழகத்தில் முதன் முறையாக பாறை ஓவியத்தில் தொறுபூசல் வரையப்பட்டுள்ளது. இந்த ஓவியத் தொகுதியானது, சங்க இலக்கியங்கள் கூறும் ஆநிரை(கால்நடை) கவர்தல் மற்றும் ஆநிரை மீட்டல் ஆகியவற்றுக்காக நடக்கும் பூசலை சித்தரிப்பதாக உள்ளது. சங்க கால தொறுபூசல் என்னும் மிகவும் போற்றப்பட்ட வாழ்வியல் பகுதியை படம்பிடித்துக் காட்டுவதாக அமைந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.கருத்தரங்கில், கிருஷ்ணகிரி மேகநாதன் 300 ஆண்டுகள் பழமையான வாளை ஆய்வுக்குழுவிற்கு வழங்கினார். நிகழ்ச்சியில் கணேசன், சாதிக்உசேன், பொன்னுசாமி, செல்வகுமார், தமிழ்செல்வன், லோகேஷ், பூவரசன், தரனிஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். விஜயகுமார் நன்றி கூறினார்.

Related Stories:

>