தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காப்புக்காட்டில் விருதுநகர் அதிகாரி தற்கொலை

தேன்கனிக்கோட்டை, ஜன.22: தேன்கனிக்கோட்டை அருகே, நொகனூர் வனப்பகுதியில் தனியார் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த விருதுநகரைச் சேர்ந்த அதிகாரி, விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சடலத்தை மீட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.  விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே மங்காபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் நிறைகுளத்தான் மகன் இசக்கிமுத்து(30). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மத்திகிரியில் சொந்தமாக வீடு கட்டி வசித்து வந்தார். இவரது மனைவி மணிமேகலை(26). இவர்களுக்கு 3வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இசக்கிமுத்து, ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் உதவி மேலாளராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் காலை, வங்கிக்கு செல்வதாக மனைவியிடம் கூறிச்சென்றவர் வீடு திரும்பவில்லை. இரவு வெகு நேரமாகியும் வீடு திரும்பாத நிலையில், அவரது செல்போனில் தொடர்பு கொள்ள முயன்றபோதும் எடுக்கவில்லை.

இதுகுறித்து அவரது மனைவி உறவினர்களிடம் தெரிவித்து பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர். இந்நிலையில், இசக்கிமுத்து தான் மருந்து குடித்து விட்டதாக செல்போனில் படம் எடுத்து, நண்பருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளார். ஆனால், இடம் சரியாக தெரியாததால், மத்திகிரி காவல் நிலையத்தில் நேற்று காலை புகார் அளித்தனர். இதுகுறித்து மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்து, வாட்ஸ் அப்பில் உள்ள போட்டோவை வைத்து தேடுதல் வேட்டையை முடுக்கி விட்டனர். அப்போது, தேன்கனிக்கோட்டை அருகே நொகனூர் காட்டு பகுதியை செல்போன் சிக்னல் காட்டியது. இதையடுத்து, தேன்கனிக்கோட்டை போலீசார் மற்றும் வனத்துறையினர், நேற்று மதியம் நொகனூர் வனப்பகுதிக்கு விரைந்தனர். அங்கு வாளையார் குட்டை என்னுமிடத்தில் வாயில் நுரை தள்ளியவாறு இசக்கிமுத்து சடலமாக கிடந்தார். அவர், பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், அவரது சாவுக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>