வாகனம் மோதி பலியான மாணவர் சடலத்துடன் உறவினர்கள் மறியல்

பென்னாகரம், ஜன.22: பென்னாகரம் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதி கல்லூரி மாணவன் உயிரிழந்தார். விபத்துக்கு காரணமான நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி, வாலிபரின் சடலத்துடன் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த அண்ணா நகரைச் சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் ரவிவர்மன்(20). தர்மபுரியில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த 13ம் தேதி போகி பண்டிகையன்று, இரவு 8 மணியவில், தனது வீட்டின் அருகே இருந்த சாலையில் நடந்து சென்ற போது, அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு, பென்னாகரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரவிவர்மன், சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  இது தொடர்பாக ரவிவர்மனின் தாயார் ராதிகா கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில், விபத்து ஏற்படுத்தியவரை கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் எனக்கூறி, ரவிவர்மன் சடலத்துடன், உறவினர்கள் பென்னாகரம் அரசு மருத்துவமனை அம்பேத்கர் சிலை அருகே, நேற்று மாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பென்னாகரம் டிஎஸ்பி சௌந்தர்ராஜன், சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது விபத்து ஏற்படுத்திய நபரை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து 2மணி நேரத்திற்கு பிறகு, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories:

>