திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் மாநகராட்சியின் முதல் பாஜ மேயராக வி.வி. ராஜேஷ் பதவி ஏற்றார்.
கேரளாவில் கடந்த 9, 11 ஆகிய தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இதில் மாவட்ட பஞ்சாயத்துகள் தவிர மாநகராட்சி, நகராட்சி, பிளாக் பஞ்சாயத்து மற்றும் கிராம பஞ்சாயத்துகளில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றது.
6 மாநகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி நான்கையும், கோழிக்கோடு மாநகராட்சியில் இடதுசாரி கூட்டணியும், திருவனந்தபுரம் மாநகராட்சியில் பாஜ கூட்டணியும் அதிக வார்டுகளில் வெற்றி பெற்றது.கடந்த 21ம் தேதி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் கவுன்சிலர்கள் பொறுப்பேற்றனர். இந்நிலையில் நேற்று மாநகராட்சி, நகராட்சிகளில் மேயர்கள் மற்றும் தலைவர்கள் பொறுப்பேற்றனர்.
கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கண்ணூர் ஆகிய மாநகராட்சிகளில் காங்கிரஸ் மேயர்களாக ஹபீஸ், மினிமோள், நிஜி ஜஸ்டின், இந்திரா ஆகியோரும், கோழிக்கோடு மேயராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த சதாசிவனும், திருவனந்தபுரம் மேயராக பாஜ மாநில பொதுச்செயலாளரான வி.வி. ராஜேஷும் பொறுப்பேற்றனர். கேரளாவில் முதன்முறையாக திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றி உள்ளது குறிப்பிடத்தக்கதாகும். இங்கு துணை மேயராக பாஜவை சேர்ந்த ஆஷாநாத் பொறுப்பேற்றார்.
