×

ஐகோர்ட் தீர்ப்பு வந்ததும் குளங்கள் தூர்வாரப்படும் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் கலெக்டர் உறுதி

நாகர்கோவில், ஜன.22: சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் குளங்கள் தூர்வாருதல் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வந்ததும் குளங்களை தூர்வார நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.
குமரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலக  நாஞ்சில் கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கடைசியாக 2 கூட்டங்கள் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக நடைபெற்ற நிலையில் கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் 10 மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக இந்த கூட்டம், அரங்கில்  நடைபெற்றது. அகஸ்தீஸ்வரம், தோவாளை, குருந்தன்கோடு, தக்கலை ஒன்றியங்களுக்கு முதல்கட்டமாகவும், திருவட்டார், கிள்ளியூர், முன்சிறை, ராஜாக்கமங்கலம், மேல்புறம் ஒன்றியங்களுக்கு 2ம் கட்டமாகவும் கூட்டம் நடத்தப்பட்டது.  கலெக்டர் அரவிந்த் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் ரேவதி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, வேளாண்மைத் துறை இணை இயக்குனர் சத்தியஜோஸ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வாணி, பயிற்சி கலெக்டர் ரிஷாப் மற்றும்  அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாசனத்துறை சேர்மன் வின்ஸ் ஆன்றோ,  புலவர் செல்லப்பா, பத்மதாஸ், முருகேசபிள்ளை, விஜி, தங்கப்பன், சண்முகம்பிள்ளை, தேவதாஸ் உட்பட விவசாயிகள் சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் பங்கேற்றனர். வள்ளியாற்றில் ஆக்ரமிப்புகளை அகற்ற வேண்டும், ஆகாயத்தாமரையை  அகற்ற வேண்டும் என்று விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.  வீரநாராயணசேரி கூட்டுறவு சங்கத்தில் ஊழல் வழக்கு நிலுவையில் உள்ள ஒருவருக்கு நியமனம் வழங்கப்பட்டிற்கு கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.  மாத்தூர் தொட்டி பாலம் பகுதிகளை அளவீடு செய்ததற்கு கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் அந்த பகுதியில் குறிப்பிட்ட ஒரு சர்வே எண்ணில் நிலப்பகுதியை கண்டுபிடிக்க முடியாத நிலை இருப்பதாக  விவசாயிகள் தெரிவித்தனர்.

அணைகள் திறந்து கடை வரம்பு பகுதிகள் வரை இதுவரை தண்ணீர் விநியோகம் நடைபெறவில்லை. குளச்சல், சேரமங்கலம், நெய்யூர் பகுதிகளில் தண்ணீர் வரவில்லை என்று புலவர் செல்லப்பா குற்றம்சாட்டினார். இதற்கு பதிலளித்த பொதுப்பணித்துறை அதிகாரி தோவாளை சானல், பத்மநாபபுரம் புத்தனாறு சானல் உள்ளிட்ட சானல்களில் நீர்க்கசிவு, மடைகள் பழுது போன்ற பணிகளை தனித்தனியாக சீர்செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்திற்கு முன்பாக சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார். நெய்யார் இடதுகரை கால்வாய் தண்ணீர் பிரச்னை எந்த அளவில் உள்ளது? எனப் புலவர் செல்லப்பா கேள்வி எழுப்பினார். காவிரி தொழில்நுட்ப பிரிவு இந்த வழக்கு தொடர்பான விசாரணையை கையாண்டு வருகிறது, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது என அதிகாரிகள் பதிலளித்தனர். நெய்யாறு இடதுகரை கால்வாயில் தூர்வாரும் பணிகள் நடைபெறவில்லை? தண்ணீர் வந்தாலும் செல்ல முடியாத நிலை உள்ளது என்று விவசாயிகள் கேள்வி எழுப்பியபோது நீர்வரத்து இல்லாத கால்வாயை ஏன் தூர் வாருகிறீர்கள்? என்று கேட்கின்றனர். 2004ம் ஆண்டுக்குப் பின்னர் இதுவரை கடந்த 16 ஆண்டுகளாக தண்ணீர் வரவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர். குமரி மாவட்டத்திலுள்ள பாசன குளங்களை தூர்வார என்ன நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என விவசாயிகள் கேள்வி எழுப்பினர்.  இது தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடைபெற்று தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தீர்ப்பு வெளிவந்த பின்னர் அதன் அடிப்படையில் அனுமதி வழங்கப்படும். தீர்ப்பை விரைந்து வழங்க கேட்டு நீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது என கலெக்டர் பதில் அளித்தார்.

கேரளாவிலிருந்து இறைச்சிக் கழிவுகள், மருத்துவ கழிவுகள் குமரி மாவட்டத்திற்குள் கொண்டு வருகின்றனர். தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்களில் இவை கொண்டு வந்து கொட்டப்படுகிறது. குழித்துறையில் ஆற்றில் கொட்டி செல்கின்றனர். போலீசார் அதிகாரிகள் கண்டுகொள்வது இல்லை, நேற்றும் இதுபோன்று நடந்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் பதிலளித்தார்.  தென்னையை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த உயிர் ஊக்கி மருந்து இலவசமாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டது. தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.  குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம நிர்வாக அதிகாரியின் கீழ் செயல்படும் வில்லேஜ் ‘அ’ பதிவேட்டில் அனைத்து குளங்கள், வாய்க்கால்களை கணினி வரைபடத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று விவசாயி தேவதாஸ் கோரிக்கை வைத்தார். இது தொடர்பான கோப்பு நடவடிக்கையில் உள்ளது என்று பதில் அளிக்கப்பட்டது.

முக கவசம் அணியாத விவசாயி
ஆரல்வாய்மொழியை சேர்ந்த விவசாயி ஒருவர் முக கவசம் அணியாமல் வந்து கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். இது தொடர்பாக பேசிய கலெக்டர் முக கவசம் அணியாமல் இங்கு வந்து பேசக்கூடாது என்றும், வெளியே செல்ல வேண்டும் என்றும் தெரிவித்தார். இதனை தொடர்ந்து அவர் முக கவசம் அணிந்து வந்த பின்னர் பேச அனுமதிக்கப்பட்டார். விவசாயிகள் கூட்டம் 2 கட்டமாக நடைபெற்றபோதிலும் அதிகாரிகள் பலர் முதல்கூட்டத்திற்கு வருகை தரவில்லை. இதனால் விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு போதிய விளக்கம் உடனே கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. ஏரியா வாரியாக பிரிக்கப்பட்டதால் அதிகாரிகளும் ஏரியாவுக்கு தகுந்தவாறு நேரத்தை மாற்றியது இந்த குழப்பத்தை ஏற்படுத்தியது.

பேச்சிப்பாறை அணை தூர்வாரப்படும்  பேச்சிப்பாறை அணையை தூர்வார நடவடிக்கை  எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக  வனத்துறையில் இருந்து என்ஓசி சான்றிதழ் பெற வேண்டியுள்ளது. அது கிடைத்ததும்  தூர்வாரும் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ரயில்களில் கேரளாவுக்கு செல்லும் கற்கள் கூட்டத்தில், மேற்கு தொடர்ச்சி மலையில் கல்குவாரிகள்  செயல்படவில்லை என்று அதிகாரிகள் கூறினர். அதே வேளையில் இரணியல் ரயில்  நிலையத்தில் பாறைக் கற்கள் உடைக்கப்பட்டு ஜல்லிகளாகக் குவித்து  வைக்கப்பட்டுள்ளது. இவை ரயில்களில் கேரளாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.  இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென  செல்லப்பா கோரிக்கை விடுத்தார்.  சம்பந்தப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என  கலெக்டர் உறுதியளித்தார்.

நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்படுமா? குமரி மாவட்டத்தில் நெல் அறுவடை  பணிகள் பிப்ரவரி மாதம் தொடங்கி விடும். எனவே நெல் கொள்முதல் நிலையங்களை  உடனே திறக்க வேண்டும். நெல் வயல்கள் உள்ள பரசேரி, வில்லுக்குறி,  குருந்தன்கோடு போன்ற இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டால்  விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த  அதிகாரிகள் இடத்தை ஆய்வு செய்த பின்னர் நெல் கொள்முதல் நிலையங்கள் இந்த  மாத இறுதிக்குள் திறக்கப்படும் என்றார்.

Tags : Collector ,meeting ,iCourt ,
× RELATED குடிநீர் பிரச்னைகளுக்கு...