×

நாகர்கோவில் மாநகர பகுதியில் பழுதான சாலைகள் பிப்.15க்குள் சீரமைப்பு

நாகர்கோவில், ஜன.22: நாகர்கோவில் மாநகர பகுதியில் பழுதான ரோடுகளின் சீரமைப்பு பணிகள் வரும் பிப்ரவரி மாதம் 15ம் தேதிக்குள் நிறைவு பெறும் என்று கலெக்டர் அரவிந்த் தெரிவித்தார்.
நாகர்கோவில், வடசேரி பஸ் நிலையத்தில் 32 வது சாலை பாதுகாப்பு மாதவிழா விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட பேரணி வேப்பமூடு சந்திப்பு வரை நடைபெற்றது. குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் இரு சக்கர வாகன பேரணியை தொடக்கி வைத்தார். குமரி மாவட்ட எஸ்.பி பத்ரிநாராயணன் முன்னிலை வகித்தார். இதில் பெண் போலீசார், ஊர்காவல்படை, என்எஸ்எஸ் மாணவிகள் என சுமார் 200 பேர் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணிந்து பங்கேற்றனர். பின்னர் கலெக்டர் அரவிந்த் நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடித்தல் தொடங்கியுள்ளது. பிப்ரவரி 17 தேதி வரை இது நடைபெறும்.  சாலை பாதுகாப்பு தொடர்பான அடிப்படை விஷயங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த பேரணி நடத்தப்படுகிறது. ஹெல்மெட் அணிதல், முகப்பு விளக்குகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுதல், போக்குவரத்து விதிகளை கடைபிடித்தல் போன்ற விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

குமரி மாவட்டத்தில் புள்ளி விபரங்களின்படி விபத்து மரணங்கள் 2019ல் 193 இருந்தது. 2020ல் 146 ஆக குறைந்துள்ளது. இதற்கு கொரோனாவினால் வாகன போக்குவரத்து குறைந்து விபத்துகள் குறைய காரணமாக இருந்தது என்றும் கூறலாம். பொதுவாக கடந்த சில ஆண்டுகளாகவே விபத்துகள் என்பது அதிகரித்த வண்ணம்தான் உள்ளது. நாகர்கோவிலில் சாலைகளில் குடிநீர் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. குடிநீர் திட்டம் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற சாலை பணிகள் முடிந்தபின்னர் குடிநீர் வடிகால் வாரியத்திடம் இருந்து அந்த சாலைகள் நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. அதன் பின்னர் நெடுஞ்சாலைத்துறையால் சீரமைப்பு பணிகள் நடைபெறுகிறது. நேற்றும் இது தொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. குடிநீர் வடிகால் வாரியம், நெடுஞ்சாலைத்துறை, மாநகராட்சி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தற்போது சாலைகள் தோண்டப்பட்டு நிலுவையில் உள்ள பணிகள் அனைத்தும் பிப்ரவரி 15ம் தேதிக்குள் முடித்து ஒப்படைக்க கோரியுள்ளோம். அதன் பிறகும் புதியதாக சாலைகள் எடுத்து பணிகள் செய்ய வேண்டியது உள்ளது. தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலைகள், பிரதான மாநகர பகுதிகளில் நடைபெற்று வருகின்ற பணிகள் பிப்ரவரி இறுதிக்குள் நிறைவு பெற்றுவிடும். அதன் பிறகு சாலைகளில் போக்குவரத்திற்கு பிரச்னை இருக்காது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
முன்னதாக கலெக்டர் அரவிந்த், சாலை பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஸ்டிக்கர்களை பஸ்களில் ஒட்டினார். செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பாக மின்னணு வாகனத்தின் மூலம் திரையிடப்பட்ட சாலை பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு குறும்படங்களையும் பார்வையிட்டார். நாகர்கோவில் டிஎஸ்பி வேணுகோபால், நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலர் சந்திரசேகர், மோட்டார் வாகன ஆய்வாளர் சக்திவேல், போக்குவரத்து ஆய்வாளர் அருண் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


Tags : roads ,area ,Nagercoil ,
× RELATED வாக்கு எண்ணிக்கை மையத்தில் தேர்தல் பொது பார்வையாளர் ஆய்வு