×

அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் சேதம் சாலை சீரமைப்பு கோரி கிராம மக்கள் திடீர் மறியல்

ராதாபுரம், ஜன. 22:  கூடங்குளம் அருகே கல்குவாரி லாரிகளால் சேதமடைந்த சாலையை சீரமைக்க வலியுறுத்தி செட்டிகுளத்தில் கிராம மக்கள் நேற்று காலை திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.  நெல்லை மாவட்டம் கூடங்குளம், செட்டிகுளம் பகுதிகளில் 10க்கும் மேற்பட்ட கல் குவாரிகள் இயங்கிவருகின்றன. இங்கிருந்து நாகர்கோவில் மற்றும் கேரள பகுதிகளுக்கு தினமும் சுமார் 60 லாரிகள் மூலமாக ஜல்லி, கருங்கல் உள்ளிட்டவை கொண்டுசெல்லப்படுகிறது. பெரும்பாலான லாரிகள் செட்டிகுளம் வழியாக இயக்கப்படுகின்றன. இதனிடையே அதிக அளவில் பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளால் இங்குள்ள சாலை சேதமடைந்துள்ளன. உருக்குலைந்த சாலையில் பயணிக்கும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்துக்கு உள்ளாகும் அவலம் தொடர்கிறது.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் பலனில்லை. இதனால் ஆவேசமடைந்த கிராம மக்கள், டிகுளம் பகுதியில் சேதமடைந்த சாலையை துரிதமாக சீரமைக்க வலியுறுத்தியும், விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கல்குவாரி லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் செட்டிகுளம் ரெங்க நாராயணபுரம் மெயின்ரோட்டில் நேற்று காலை திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு சாலையின் இருபுறமும் வாகனங்களும் அணிவகுத்து நின்றன. தகவலறிந்து விரைந்துசென்ற கூடங்குளம் போலீசார் சமரசப்படுத்தினர். விரைவில் சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். அதன்பிறகே அனைவரும் அங்கிருந்து கலைந்துச் சென்றனர். இருப்பினும் திடீரென நடந்த சாலை மறியலால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு நிலவியது.

Tags : protest ,
× RELATED 26ம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து கடலில்...