மழை பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் கோரி திருவேங்கடம் தாலுகா ஆபிஸ் முற்றுகை விவசாயிகள் ஆவேசம்

திருவேங்கடம், ஜன. 22:  தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கக் கோரி திருவேங்கடம் தாலுகா அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனர்.  தென்காசி  மாவட்டம், திருவேங்கடம் வட்டாரத்தில் மைப்பாறை, வரகனூர், நடுவப்பட்டி,  குருஞ்சாக்குளம், வெள்ளாகுளம், ராமலிங்கபுரம், அத்திப்பட்டி,  ஏ.கரிசல்குளம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மக்காச்சோளம்,  பருத்தி, உளுந்து, பாசி போன்றவற்றை விவசாயிகள் அதிக அளவில் சாகுபடி செய்திருந்தனர். கடந்த வாரம் தொடர்ந்து பெய்த மழையால் நீரில் மூழ்கி பயிர்கள் அனைத்தும் அழுகி சேதமடைந்தன. அத்துடன் ஒரு சில பயிர்கள் மீண்டும் முளைக்கத்துவங்கின. இதனால் கடும் பாதிப்புக்கு உள்ளான விவசாயிகள், உரிய நிவாரணம் கோரி முறையிட்டும் பலனில்லை. இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள், சேதமடைந்த பயிர்களுடன் திருவேங்கடம் தாலுகா அலுவலகத்திற்கு திரண்டுசென்று முற்றுகையிட்டனர். தொடர் மழையால் முற்றிலும் பாதிக்கப்பட்ட பாசி, உளுந்து, மக்காச்சோளம் பருத்தி உள்ளிட்ட அனைத்துப் பயிர்களையும் வருவாய், வேளாண் துறை அதிகாரிகள் கள ஆய்வு நடத்தி ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வீதம் நிவாரணம் வழங்க வேண்டும். கடந்த நிதியாண்டில் பெற்ற பயிர்க்கடன்களை முழுமையாக  தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். பின்னர் கோரிக்கைகள் அடங்கிய மனுவை  திருவேங்கடம் துணை தாசில்தார் செல்வக்குமாரிடம் வழங்கினர். தேசிய விவசாயிகள் சங்க மாநில தலைவர் வக்கீல் ரங்கநாயுலு தலைமையில் இணைய தள  மாநில அமைப்பாளர் பரம்பக்கோட்டை ராஜ்குமார் முன்னிலையில் நடந்த  இப்போராட்டத்தில் மைப்பாறை கிளை தலைவர் துரைராஜ், வரகனூர் கணபதிசாமி  மற்றும் விவசாயிகள் என திரளானோர் பங்கேற்றனர்.

Related Stories:

>