கடையநல்லூர் அரசு மகளிர் பள்ளியில் கல்வித்துறை இணை இயக்குநர் ஆய்வு

கடையநல்லூர், ஜன.22:   கடையநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கல்வித்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.  கொரோனா பரவல் காரணமாக அடைக்கப்பட்டிருந்த  பள்ளிகள் 10, 12ம் வகுப்பு மாணவர்கள் நலனுக்காக கடந்த 19ம் தேதி முதல் திறக்கப்பட்டன. பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பள்ளிகளை செயல்படுத்துமாறு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது. அத்துடன் இதற்கான ஆய்வு அலுவலர்களையும் கல்வித்துறை நியமித்திருந்தது.   நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கான கண்காணிப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கல்வித்துறை இணை இயக்குநர் ராஜேந்திரன் கடையநல்லூர், இடைகால் பள்ளிகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளிகளில் போதுமான தெர்மல் ஸ்கேனர், சானிடைசர் வசதிகள் செய்யப்பட்டுள்ளனவா? என்பதை கண்காணித்த அவர், 10, 12ம் வகுப்புகளில் பயிலும்  மாணவர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘10, 12ம் வகுப்பு மாணவர்கள் கல்வி பயில ஏதுவாக கன்னியாகுமரி மாவட்டத்தில் 487 பள்ளிகளும், தென்காசி மாவட்டத்தில் 239 பள்ளிகளும், நெல்லை மாவட்டத்தில் 313 பள்ளிகளும் திறக்கப்பட்டுள்ளன. இதையடுத்து தினமும் 20 முதல் 25 பள்ளிகள் வரை ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அரசின் வழிகாட்டு நெறிமுறை படி வருகை தந்துள்ள மாணவர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தி உள்ளேன்’’ என்றார்.  பேட்டியின் போது முதன்மை கல்வி அலுவலர் கருப்பசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள் சிதம்பரநாதன், ஜெயபிரகாஷ் ராஜன் உடனிருந்தனர்.

Related Stories:

>