தூத்துக்குடியில் பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் தமிழகம் வளர்ச்சி அடைந்திட திமுக ஆட்சி அமையவேண்டும் கனிமொழி எம்பி பேச்சு

தூத்துக்குடி, ஜன.22: தமிழகம் வளர்ச்சி அடைந்திட திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைய வேண்டும் என்று கனிமொழி எம்பி கூறினார். தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி திமுகவின் பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம், விடியலை நோக்கி ஸ்டாலின் குரல் கூட்டம் தூத்துக்குடி கலைஞர் அரங்கத்தில் நடந்தது. வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்எல்ஏ தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர் ஜெகன்பெரியசாமி, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், கனிமொழி எம்பி பேசியதாவது, இந்த தேர்தலில் அதிமுக கட்சி இருக்கப்போகிறதா, உடையப்போகிறதா? என்ற நிலையில் தேர்தலை சந்திக்கப் போகிறது. ஊழல் நிறைந்த அதிமுக அரசால் தமிழகத்தில் எந்த வளர்ச்சி திட்டங்களும் நடைபெறவில்லை, ஆனால் வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றியதாக பொய் பிரசாரம் செய்து வருகிறது. மாநில அரசு, ஆட்சியை மத்திய அரசிடம் அடகு வைத்துள்ளது.  தமிழகம் வளர்ச்சி அடைந்திட திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி அமைந்திடவேண்டும். இந்த தேர்தலில் நாம் தமிழகத்தை மீட்டெடுக்க வேண்டும். வரும் தேர்தல் மூலமாக நாம் ஆட்சிக்கு வரப்போகிறோம் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும் நாம் அனைவரும் மிக கவனமாக செயல்படவேண்டும்.

யார் யாரெல்லாம் சட்டமன்றத்திற்குள் நுழைந்து விடக்கூடாது என்பதை நாம் புரிந்து செயல்படவேண்டும். மத்திய அரசு துணையோடு பணபலம், அதிகார பலத்துடன் வரும் அதிமுகவை வீழ்த்த விழிப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

முன்னதாக மாற்றுத்திறனாளிகளாக மேலாத்தூரைச் சேர்ந்த இந்திரா, கோவில்பட்டியைச் சேர்ந்த பழனி ஆகியோருக்கு தனது சொந்த நிதியிலிருந்து இருசக்கர வாகனங்களை கனிமொழி எம்பி வழங்கினார். சமீபத்தில் திமுகவில் இணைந்த ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளரும், திமுகவில் மாநில சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ஜோசப் ஸ்டாலின் மாநகர பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற 3 நவீன மோட்டார்களை கனிமொழி எம்பியிடம் வழங்கினர். கூட்டத்தில், மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், துணை செயலாளர்கள் ஆறுமுகம், ராஜ்மோகன் செல்வின், பொதுக்குழு உறுப்பினர் கோட்டுராஜா, செயற்குழு உறுப்பினர் ஜெயக்குமார்

ரூபன், மீனவரணி அமைப்பாளர் அந்தோணிஸ்டாலின், துணை அமைப்பாளர் சேசையா, பொறியாளரணி அமைப்பாளர் அன்பழகன், மாணவரணி  துணை அமைப்பாளர் பாலகுருசாமி, தொண்டரணி துணை அமைப்பாளர் ராமர், மாவட்ட சிறுபான்மை பிரிவு நல அணி துணை அமைப்பாளர்கள் எஸ்.டி.ஆர்.பொன்சீலன், ஜீவன்ஜேக்கப், பகுதி செயலாளர்கள் சுரேஷ்குமார், நிர்மல்ராஜ், ராமகிருஷ்ணன், ரவீந்திரன், மாநகர துணை செயலாளர்கள் கீதாமுருகேசன், கனகராஜ், மருத்துவ அணி அமைப்பாளர் அருண்குமார், மாநகர பொருளாளர் அனந்தய்யா, வர்த்தக அணி கிறிஸ்டோபர், ஜெபசிங் உட்பட பலர் பங்கேற்றனர்.  தொடர்ந்து, தூத்துக்குடி கந்தசாமிபுரம், லெவிஞ்சிபுரம், ராஜகோபால்நகர் பகுதிகளில் நடந்த மருத்துவ முகாம்களை கனிமொழி எம்பி தொடங்கி வைத்தார்.

Related Stories: