- உத்தரப்
- பிரதேசம்
- பல்கலைக்கழக
- அலிகார்
- ராவ் டேனிஷ்
- ஏபிகே உயர்நிலைப்பள்ளி
- அலிகார் முஸ்லீம் பல்கலைக்கழகம்
- உத்திரப்பிரதேசம்
அலிகார்: உத்தரப் பிரதேச மாநிலம் அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஏபிகே உயர்நிலைப் பள்ளியில் கணினி அறிவியல் ஆசிரியராக ராவ் டானிஷ் அலி (45) என்பவர் கடந்த 11 ஆண்டுகளாகப் பணியாற்றி வந்தார். இவர் நேற்று முன் தினம் (24ம் தேதி) இரவு சுமார் 9 மணியளவில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மவுலானா ஆசாத் நூலகம் அருகே தனது சக ஊழியர்கள் இருவருடன் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு மர்ம நபர்கள் டானிஷ் அலியை வழிமறித்தனர்.
அவர்களில் ஒருவன், ‘என்னை இன்னும் உனக்கு யார் என்று தெரியாது, இப்போது தெரிந்து கொள்வாய்’ என்று மிரட்டல் விடுத்தவாறே தான் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் டானிஷ் அலியை நோக்கி சரமாரியாக சுட்டான். இதில் தலையில் குண்டு பாய்ந்த அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனடியாக ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
பல்கலைக்கழக வளாகத்திற்குள் நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் மாணவர்களிடையேயும், பேராசிரியர்களிடையேயும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கொலையாளிகளைப் பிடிக்க காவல் துறை சார்பில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், தனிப்பட்ட முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
