×

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு சொத்து பிரச்னைக்கு தீர்வு கேட்டு பெட்ரோல் கேனுடன் வந்த வாலிபர் போலீசில் சோதனையில் சிக்கினார்

திருவண்ணாமலை, ஜன.22: சொத்து பிரச்னைக்கு தீர்வு காண கோரி, திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க வந்தவர்களிடம் இருந்து பெட்ரோல் கேனை போலீசார் பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை அடுத்த கலர்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பாலாஜி(34). இவர் நேற்று தன்னுடைய 2 சகோதரிகளுடன் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்தார். அப்போது, கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், பாலாஜி கொண்டு வந்த ைபயை சோதித்தனர். அதில், பிளாஸ்டிக் கேனில் பெட்ரோல் நிரப்பி கொண்டுவந்தது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து, அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், பவித்திரம் கிராமத்தில் தங்களுக்கு சொந்தமான விவசாய நிலத்தை, உறவினர்கள் அபகரிப்பதாகவும், இது தொடர்பாக பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் தீக்குளிக்க முயற்சித்து, அதிகாரிகளின் கவனத்தை ஈர்க்க முயற்சித்ததாகவும் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, அவர்களை எச்சரித்த போலீசார், சம்பந்தப்பட்ட போலீஸ் ஸ்டேஷனில் இது தொடர்பாக புகார் அளித்து தீர்வு காண தெரிவித்து அனுப்பி வைத்தனர்.

Tags : office ,Thiruvannamalai Collector ,
× RELATED பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து...